கேள்வி: தங்கள் வாக்கின்படி சிவன் கோயிலுக்கு என்னால் முடிந்த அறப்பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் சில தடங்கல்கள் வருகின்றன. அந்தக் கோவில் திருப்பணிகள் எப்போது பூர்த்தியாகும்?
இறைவன் கருணையால் விரைவில் கலச விழா (கும்பாபிஷேகம்) காண யாமும் இறையிடம் பிராத்தித்து நல்லாசிகளை இத்தருணம் கூறுகிறோம். இத்தருணம் யாம் இயம்புவது யாதென்றால் கூடுமானவரை இது போன்ற பொது செயல்களில் ஈடுபடுகின்ற மனிதர்கள் கூடுமானவரை நேர்மையாக செயல்படுவது மிக மிக முக்கியம். என்றாலும் கூட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பெருவாரியான இடங்களில் அது இயலாமல் போய் விடுகிறது. யாங்கள் (சித்தர்கள்) ஒருவனைப் பார்த்து ஆங்காங்கே நடக்கும் ஆலயத் திருப்பணிகளுக்கு உன்னால் முடிந்ததை செய் என்றால் அதைப் போல் நிறைய காப்பகங்களுக்கு முடிந்த உதவிகளை செய் என்றால் அவன் சென்று பார்த்துவிட்டு என்ன கேட்பான்? அங்கு நடப்பதெல்லாம் திருப்தியாக இல்லை. ஏமாற்றுகிறார்கள். எப்படி நான் செய்வது? என்று கேட்பான். இல்லை (என்றால்) தனத்தைக் கொடுத்து விட்டு தனத்தைக் கொடுத்தேன். என்னைப் போல் பலரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அங்கு பணி பூர்த்தியடையவில்லை. ஏதோ தவறு நடக்கிறது. ஏன் இப்படிப்பட்ட இடத்திற்கு நாங்கள் உதவி செய்யும் ஒரு நிலை ஏற்பட்டது? நீங்கள் தானே கூறினீர்கள். அதனால் தானே அறப்பணிகளுக்கு உதவினேன். இப்படி வீணாகிவிட்டதே? என்றெல்லாம் எம்மிடம் (அகத்திய மாமுனிவர்) அடுக்கடுக்காக வினாவை வைப்பான். இதற்கெல்லாம் ஒட்டு மொத்தமான பதில் 100 க்கு 100 நேர்மையான மனிதர்களை இந்த உலகம் இன்னும் காணவில்லை என்பதுதான்.
எனவே அவரவர்களால் சக்திக்கு இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அது ஆலயத் திருப்பணியாக இருந்தாலும் வேறு தர்ம காரியங்களாக இருந்தாலும் செய்து கொண்டே செல்ல வேண்டியதுதான். விளைவுகளைக் குறித்து சிந்திக்கக் கூடாது. ஒரு முறையோ இரு முறையோ செய்து பார்த்து விட்டு திருப்தியில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாமே தவிர செய்யும் முன்னரே இது நேர்மையான அமைப்பா? இங்கு தனம் தந்தால் முறையாக செயல்படுவார்களா? என்றெல்லாம் ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் எமது (அகத்திய மாமுனிவர்) நோக்கில் ஒன்று கூட இந்த உலகிலே ஏற்றம் பெறாது. இந்த நிலையிலே அந்தந்த மனிதனும் அவனவன் மன சான்றாக ஒரு ஆலயத்தை நோக்கி சென்று தன்னால் முடிந்ததை செய்து விட்டு அனைத்தும் இறைவனுக்கு சொந்தம் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விட்டோம். எனவே விளைவுகளுக்கும் இறைவனே பொறுப்பு என்று வந்து விடுவதுதான் ஏற்புடையது. இது குறித்தெல்லாம் ஆய்வு செய்தால் ஒருவன் கூட ஒரு அறப்பணி கூட செய்ய இயலாது. இல்லை திருப்தியாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். என் மனதிற்கு திருப்தியில்லையென்றால் நான் தர மாட்டேன் என்றால் அது அவனவன் விருப்பம். யாங்கள் எதுவும் தடை கூறவில்லை. எனவே உன்னால் முடிந்த உதவியை எந்த ஆலயத்திற்கும் நீ எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். தடை நீங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் விநாயகப் பெருமானை அருகிலுள்ள ஆலயம் சென்று வணங்கி பிறகு முயற்சியில் இறங்கு. தடை நீங்கி நலம் நடக்கும்.