கேள்வி: முருகனிடம் எனக்கு அன்பு அதிகம். ஏற்கனவே அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். தற்பொழுது 6 மாதமாக அகத்தியம் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறேன். அவரும் கேட்ட உடனேயே சில விஷயங்களை எனக்கு செய்து தந்திருக்கிறார். இந்த இருவரின் அன்பும் எப்பொழுதுமே குறையாமல் நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் ஆசை.
இறைவனின் கருணையாலே இன்னவன் யாது கூறினான்? முருகப் பெருமானிடம் அன்பு அதிகம் என்று. இதற்காகக் கவலைப்பட வேண்டியது அன்னையர்கள்தான். நாங்கள் அல்ல. வள்ளியும் தெய்வானையும்தான் இதைக் குறித்து கவலைப்பட வேண்டுமே தவிர நாங்கள் அல்ல. ஆயினும் இவன் பக்தி தொடர தொடர்ந்து இளையவனை (முருகப்பெருமான்) வணங்கி வர இவன் நலம் பெற தொடர்ந்து இறை வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.
கேள்வி: பரிணாமத் தொடர்தான் பிறவித் தொடரா சந்ததி தொடரா? அல்லது இறந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்கிறானா?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ரவியை (சூரியன்) வணங்கு. பிறவியின் ரகசியம் புரியுமப்பா. இது போல் இயம்புங்கால் பலரும் பலவிதமாகக் கூறலாம். யாங்கள் (சித்தர்கள்) இத்தருணம் கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய். இந்த தேகத்தோடு இருப்பது ஒரு பிறவி. இந்த தேகம் பூர்த்தியடைந்து இந்த தேகத்தை விட்டுவிட்ட ஆத்மா அதன் கர்ம பாவங்களின் அடிப்படையிலும் இறைவன் இடும் அருளாணையின்படியும் இன்னொரு தேகத்திற்குள் அதாவது இன்னொரு அன்னை வயிற்றுக்குள் புகுந்து பிறவி எடுப்பதையே பிறவி என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏனைய கருத்துக்களைக் குறித்து எமக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. அது அவனவன் மனோபாவத்தைப் பொறுத்தது. எனவே இதை நன்றாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்.