கேள்வி: வலிப்பு நோய் நீங்க மருந்து:
இறைவனின் கருணையாலே வெண்மனம் (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும் அதே போல் மதுரையம்பதி (மதுரை) சென்று அன்னை மீனாளின் (அம்பிகை மீனாட்சியம்மன்) திருவடியை வழிபாடு செய்வதும் இது போக நவகிரக வழிபாடும் தன்வந்திரி வழிபாடும் பக்தி மார்க்கத்திலே இந்த பிணியைக் குறைக்க உதவும். இதோடு அன்றாடம் உச்சிப் பொழுதிற்கு முன்பாக எதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக் கொண்டு வந்தால் தொடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால் இதோடு தக்க மருத்துவம் எடுத்துக் கொண்டால் விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.
கேள்வி: பித்தப்பை கற்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?
இறைவன் அருளால் கர்மாவை ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு வாக்கைக் கூறுகிறோம். ஏனென்றால் இது போன்ற பிணிகள் வந்துதான் ஆக வேண்டுமென்றால் விதிப்படி வந்துதான் ஆகும். அது ஒரு புறமிருந்தாலும் இக்காலம் உணவு முறையும் உடற்பயிற்சி முறையும் அறவே தடம் மாறி இருக்கின்றன. நல்ல ஆரோக்கியமான உணவை உடல் உழைப்பின்றி ஏற்ற உணவை மனிதன் உண்ணுவதும் உடல் உழைப்பை மனிதன் அலட்சியப்படுத்தியதாலும் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளில் இதுவும் ஒன்று. எனவே உடலுக்குத் தீமை என்று எது தெரிந்தாலும் அதனை உணர்வுக்கு அடிமைப்பட்டு மனிதன் தொடர்ந்து உண்ணுவதும் இது போன்ற நோய்கள் பெருகக் காரணமாகிறது. அறுசுவை என்பதிலே மனிதன் சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டு துவர்ப்பையும் கயப்பையும் (கசப்பையும்) விட்டுவிட்டான். அது இரண்டையும் சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டே வந்தால் பெருவாரியான பிணிகள் ஒரு மனிதனை அண்டாமல் இருக்கும். இக்காலத்திலே யாங்கள் பட்டியலிடத் தேவையில்லை. இந்த சத்சங்கத்தில் கூட பரிமாறப்படுகிறது பல்வேறு விதமான போக உணவுகள். இவற்றையெல்லாம் விட்டு ஒரு யோகியின் உணவு போல் மாற்றிக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் மனிதனின் அறிவுக்கு இது தெரிந்தாலும் அவன் உணர்வு இதனைக் கடைபிடிக்க விடுவதில்லை. சுருக்கமாகக் கூறப் போனால் அனலில் இட்டு சமைத்து உண்ணுகின்ற உணவிலே பெருவாரியானவற்றை விட்டுவிட்டு கொழுப்பைத் தவிர்த்து மனிதன் பசுமை படர்ந்த உணவு வகைகளையும் கூடுமானவரை கனிவகைகளையும் ஏற்றால் நல்ல பலன் உண்டு. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றால் விளைவுகளுக்கும் மனிதன்தான் பொறுப்பு.