ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 256

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பிரம்மகாரு என்ற ஞானி முன்பு இருந்தான். பலர் (இவரை) அறியலாம். அவனும் மஹா ஞானியே. அந்த காலத்திலே முறையாக வேதத்தைக் கற்றுக் கொண்டு நாங்கள்தான் இறைக்கு நெருக்கமானவர்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டு திரியும் கூட்டம் ஒன்று இருந்தது. இந்த பிரம்மஞானியை சிலர் அலட்சியம் செய்ய வேதமே உயர்ந்தது உனக்கென்ன தெரியும் வேதத்தைப் பற்றி என்றெல்லாம் சிலர் பேச இறையருளால் இந்த ஞானி என்ன செய்தான் தெரியுமா? ஒரு எருமை விலங்கை அழைத்து வேதத்தைக் கூறு என்று கூற எருமை வேதத்தை ஒப்புவித்தது. புரிகிறதா? வேதம் என்பது அதன் பொருள் உணர்ந்து அதன் உண்மையான தாத்பர்யம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மகான்களும் ஞானிகளும் கூறியது ஒன்றாக இருக்க மனிதர்கள் தம் வசதிக்கேற்ப அதனை மாற்றிக் கொள்வது என்பது கால காலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதற்கு இதை இந்த இடத்தில் கூறுகிறோம் என்றால் இன்னவள் கூறினாளே? வியாசரின் (பகவத் கீதையை எழுதியவர்) பிள்ளை பிறந்தவுடன் திவ்யமாக ஞானியாகத் திகழ்ந்தான் என்றும் வியாசர் பிறக்கும் பொழுது திவ்யமான ஞானியாகப் பிறந்தார் என்றும் அந்தளவிற்கு பிரம்மஞானம் பிறக்கும் பொழுதே இருக்கின்ற ஒருவனுக்கு ஜாதி மத இன பேதம் இருக்குமா? இவையெல்லாம் மனிதனின் இடைச் செருகல்கள்.

இன்னொன்று எதற்காக முனிவர்களும் முனிசிரேஷ்டர்களும் இல்லற வாழ்க்கை இருக்கிறதோ இல்லையோ வேறு சில நங்கையர்களோடு (பெண்களோடு) தொடர்பு கொண்டதாக காதைகள் (கதைகள்) கூறப்படுகிறதே எதற்கு? அதன் உட்பொருள் தத்துவம் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சராசரி மனிதனின் எண்ணமும் நோக்கமும் பார்வையும் ஞானிகளின் பார்வையும் இந்த விஷயத்தில் வேறாக இருக்கும். இப்பொழுது இத்தருணம் ஒன்று நிகழ வேண்டும். அதற்கு காரண காரியமாக நாம் இருக்க வேண்டும். அந்த அளவோடு நம் எண்ணம் பூர்த்தியடைந்து விடுகிறது என்ற அளவில்தான் இது போன்ற மனிதனுக்கு முரணாகத் தோன்றுகின்ற சில செயல்களை ஞானிகள் செய்கிறார்களே தவிர உள்ளார்ந்த ஆசையில் அல்ல. இதை எப்படி புரிந்து கொள்வது? என்றால் ஒரு குழந்தை ஒரு பொம்மையை வைத்து ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும். பெரியவர்களும் அந்தக் குழந்தையின் சந்தோஷத்திற்காக குழந்தையோடு விளையாடுவார்கள். குழந்தை விளையாடுவதற்கும் பெரியவர்கள் விளையாடுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? அந்த பொம்மை தான் உலகம் அந்த பொம்மையோடு இருப்பதே சந்தோஷம் என்று குழந்தை ஆழ்ந்து விளையாடுகிறது. ஆனால் வளர்ந்த மனிதனுக்குத் தெரியும் பொம்மை சந்தோஷல்ல. பொம்மை தாண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று. அப்படித்தான் லோகாய இச்சைகளில் மனிதன் ஈடுபடுவதும் மகான்கள் ஈடுபடுவதும் இது பொம்மை விளையாட்டு போன்றது தான். எனவே இது போல நிலையிலே ஒரு போதும் வியாசர் தவறாக எதையும் பேசவில்லை. அதே போல் சுகப்பிரம்மரிஷி குறித்து வருகின்ற காதைகளும் (கதைகளும்) இடைச் செருகல்களே. எந்த மகான்கள் குறித்தும் தவறாகப் பேசும் பொழுது சிந்திக்க வேண்டும். அப்படியொரு செயலை செய்வதாக இருந்தால் எப்படி அவர் மகானாக இருக்க முடியும்? என்று. அதைப் போல் சித்தர்களைப் பற்றி ஒரு காதை (கதை) எழும்புகிறது. கோரக்கர் போன்றவர்களெல்லாம் மகா ஞான ரகசியங்களையெல்லாம் எழுதியதாகவும் அதை எம்போன்ற முனிவர்கள் மறைத்து விட்டதாகவும் இன்னும் சதுரகிரியிலே அப்படி மறைக்கப்பட்ட விஷயங்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியெல்லாம் செய்துவிட்டு சிலர் நூல் எழுதுகிறார்கள்.

தெய்வ ரகசியமோ சித்த ரகசியமோ எந்தவிதமான ரகசியத்தையும் மறைக்க வேண்டிய அவசியமேயில்லை. வெட்ட வெளிச்சமாகவே இராமானுஜர் முக்திக்கு வழி அட்டாச்சரமே என்று ஆலய கோபுரத்தில் நின்று கொண்டு ஓம் நமோ நாராயணா என்று கூறுங்கள் என்று கூறினார். அதற்காக அதனைக் கேட்ட அத்தனை பேரும் மோட்சத்திற்கு சென்று விட்டார்களா என்ன? மனிதனிடம் எந்த ரகசியத்தையும் தெய்வீக ரகசியம் என்று கூறவே வேண்டாம். லோகாயத்திற்கு உதவுகின்ற விஷயம் போக வேறு எதைக் கூறினாலும் அதில் மனிதன் கவனம் செலுத்த மாட்டான் என்பதால் இறைவனும் நாங்களும் பலவற்றை வெளிப்படையாகத்தான் வைத்திருக்கிறோம். ஆனால் மனிதன் இறைவனையோ அல்லது எங்களையோ இன்றுவரை எந்த நோக்கில் அணுகுகிறான்? என்றால் தன் உலக வாழ்வில் உள்ள துன்பங்கள் தீர்வதற்காக மட்டும்தான். நாங்கள் என்ன வழிகாட்டுகிறோம்? என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.