கேள்வி: ருத்ராட்ச மாலையின் மகிமைகளைப் பற்றி
இறைவனின் கருணையால் ருத்ராட்சமாகட்டும் அது போல் துளசி ஆரமாகட்டும் இன்னும் இறை சார்ந்த பிற பொருளாகட்டும் கட்டாயம் உயர்விலும் உயர்வு. அதனை யாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய செல்வந்தன் கையிலே தனத்தை வைத்துக் கொண்டு அன்ன அங்காடிக்கு (உணவகம்) அருகே அமர்ந்து கொண்டு மூன்று தினங்களாக பசி பட்டினி உயிர் போகிறது மயக்கம் வருகிறது என்று புலம்பிக் கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள் என்ன கூறுவார்கள்? ஏனப்பா நீயோ வறியவனல்ல செல்வந்தன். (உன்) கையிலே நிறைய தனம் இருக்கிறது. அருகிலே அன்னம் விற்கும் அங்காடியும் இருக்கிறது. சென்று பசியாற்றிக் கொள்ள வேண்டியது தானே? என்று. அதைப் போல இது போன்ற உயர்ந்த தெய்வீக பொருட்களையெல்லாம் தேகத்தில் (உடலில்) அணிந்து கொண்டு தோற்றத்தில் மட்டும் தெய்வீகத்தைக் காட்டிக் கொண்டு உள்ளத்திலே மிக மிக சராசரியாக நடந்து கொள்கின்ற மனிதனுக்கு இது போன்ற உயர்ந்த பொருள்களால் எந்த விதமான பலனும் இல்லை. மனிதன் வினவலாம் (கேட்கலாம்) உண்மையில் இது உயர்ந்த விஷயம் என்றால் அதை அணிந்து கொண்ட மனிதன் தாழ்ந்த மனிதனாக இருந்தாலும் அவனையும் இது உயர்த்த வேண்டியதுதானே? என்று. கட்டாயம் உயர்த்தும். ஒரு அடி உயர வேண்டும் என்று அவன் நினைத்தால் கட்டாயம் இறைவன் இந்தப் பொருள்கள் இல்லாமல் கூட உயர்த்தி வைக்க சித்தமாக இருக்கிறார். ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாத மனிதனை இன்னும் எத்தனை பிறவி தாண்டி இந்த ஆன்மா உயரப் போகிறதோ அந்தப் பிறவியில் உயர்த்திக் கொள்ளலாம் என்று இறையே அமைதியாக இருக்கும் பட்சத்தில் யாங்களும் (சித்தர்களும்) அமைதியாகத்தான் இருக்கிறோம். இந்த ருத்ராட்சம் போன்ற பொருள்களும் தங்கள் அலைவரிசையைக் காட்டாமல் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் சிறிது பக்குவமடைந்த சிறிது பரிசுத்தம் உடைய மனிதர்கள் இதனை மந்திர சுத்தி செய்து தொடர்ந்து மந்திரம் ஜெபித்துக் கொண்டே அணிந்து கொண்டால் கட்டாயம் நல்ல பலனை அனுபவ ரீதியாகப் பார்க்கலாம்.
கேள்வி: நீங்கள் கூறியப்படி வழிபாடு நடத்த கொங்கணர் உருவம் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?
தொடர்ந்து எந்த சித்தர்களை யார் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த சித்தர்களின் நாமத்தை அவரவர்கள் அறிந்த முறையிலே குறிப்பாக பிரம்ம முகூர்த்த காலத்திலே (அதிகாலைப் பொழுது) எழுந்து மனமொன்றி மனதிற்குள் உருவேற்றி வந்தால் கட்டாயம் அந்தந்த சித்தர்களே வந்து வழிகாட்டுவார்கள். விரைவில் இது நடக்கும்.