கேள்வி: ஐயனே அம்மை நோய் எதனால் ஏற்படுகிறது? மக்கள் மாரியம்மன் உடம்பி்ல் இறங்கி விட்டதாக எண்ணி இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அன்னையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நான்கைந்து தினங்களில் அம்மை நோய் இறங்கி விடுகிறது. மருத்துவர்களோ இது நோய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?
இறைவன் அருளால் இதுபோல் பல்வேறு நோய்களுக்கு மனிதன் பல்வேறு விதமான காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நோய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும். எத்தனையோ கிருமிகள் எப்பொழுதுமே சுற்றிக் கொண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்க வேண்டும்? எனவே மீண்டும் மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள் (சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால் மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால் நல்ல எண்ணங்களும் சாத்வீக எண்ணங்களும் இருந்தால் தீவிரமான பக்தியோடு நல்ல எண்ணங்களும் சேர இவன் கூறிய நோயை மட்டுமல்ல எந்த நோயையும் மனிதன் விரட்டலாம் மருத்துவ சிகிச்சை இல்லாமல். இப்படி நாங்கள் (சித்தர்கள்) கூறினால் அடுத்ததொரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நோய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நோய் வருவது இருக்கட்டும். மனிதனே தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும் தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் கொள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு நோய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள் (சித்தர்கள்) ஒருபொழுதும் கூறமாட்டோம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றோ பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள் (சித்தர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நோயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நோய் மற்றும் இன்னும் சில நோய்களெல்லாம் இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே கொள்வோம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு கோபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.
கோடானு கோடி உயிர்களை துடிக்க துடிக்க கொல்லும் போது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும் பொழுது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவன் சொத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும் பொழுது அன்னைக்கு வராத கோபம் இந்த உலகம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி எத்தனையோ நச்சுத் தொழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது. அடுத்த வரும் தலைமுறை எப்படி போனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும் பொழுது அன்னைக்கு வராத கோபம் தன் பிணி போக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்து விடப் போகிறதா என்ன? மனிதனுக்கு சந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நோய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறோ அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று எப்பொழுதுமே கூறிக் கொண்டேயிருக்கிறோம். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.