கேள்வி: திருமண தடை இருக்கும் பெண்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
இறைவன் அருளாலே பல்வேறு ஆண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு பெண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் வருத்தம் கொள்கிறார்கள். இதை தோஷம் என்று நாங்களும் கூறினாலும் கூட வேடிக்கையாகக் கூறுகிறோம் இதை ஒரு வகையான வரம் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கக் கூடிய ஆண்களையும் பெண்களையும் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ஒரு முறைக்குப் பலமுறை கேட்டு விட்டு இதுபோல் பரிகாரங்களை செய்வது திருமண ஆகாத இளைஞர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் திருமண நிகழ்வு குறித்து யாம் கூற வருவது யாதென்றால் சிலருக்கு மிக மிக சிறிய வயதிலேயே மணம் நிகழ்ந்து விடுகிறது. சிலருக்கோ எல்லா வகையான தக்க சூழல் இருந்தும் திருமணம் என்பது தடைபட்டுக் கொண்டே செல்கிறது. பொதுவாக ஒவ்வொரு விதமான ஜாதகத்திலும் திருமணத் தடைக்கு விதவிதமான தோஷங்கள் காரணமாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக அதனை களத்திர தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது.
இதுபோல நிலையிலே பொதுவாக இது குறித்து இந்தத் தருணத்திலே பரிகாரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் சேய்கள் (பிள்ளைகள்) நவக்ரக தம்பதியரை நாடிச்சென்று இயன்றவரை நல்ல முறையில் வழிபாடு செய்வதும் வழிபாடு என்றால் என்ன? என்று அடுத்து ஒரு வினா வரும் சமயத்திலே வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகமோ நல்ல நறுமணமிக்க மலர் ஆரங்களை சாற்றி வழிபாடு செய்வதும் வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் ஏழை ஆண் பெண்களுக்கு திருமண உதவி செய்வதும் ஆலயங்களில் தெய்வத் திருமண விழா வைபவம் நிகழும் பொழுது அதில் இயன்ற அளவு பங்கெடுத்துக் கொள்வதும் இந்தத் திருமண தோஷம் நிவர்த்தி ஆவதற்கு வழியாகும். இவையெல்லாம் கடினம் என்று எண்ணக் கூடியவர்கள் அருகில் உள்ள ஆலயம் சென்று குறைந்த பட்சம் ஏக மண்டலம் (48 தினங்கள்) ஒரு பொழுது விரதத்தோடு சப்த வதன தீபம் அதாவது ஏழு முக நெய் தீபம் இறைவனுக்கோ இறைவிக்கோ பொதுவாகவே கூறுகிறோம். சிவன் ஆலயமாக இருந்தாலும் மகாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் மகாலட்சுமி ஆலயமாக இருந்தாலும் அம்பாளாக இருந்தாலும் எந்த இறை வடிவமாக இருந்தாலும் பரிபூரண சரணாகதியோடு சப்த வதன நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் தீபம் ஏற்ற இயலாத நிலையிலே தக்கதொரு மலர் ஆரம் (மாலை) தெய்வ ரூபத்திலே திருவடி(பாதம்) வரை அந்த மலர் ஆரம் இருக்கும் வண்ணம் தொடர்ந்து சுக்ர வாரம் (வெள்ளிக்கிழமை) அல்லது மங்கள வாரம் (செவ்வாய்க்கிழமை) அல்லது அவரவர்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற பொழுது இது எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவர்கள் இயன்ற பொழுது சென்று வழிபட்டு வர கட்டாயம் திருமண தோஷம் அகன்று நல்விதமாய் திருமணம் நடப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
தொழில் தோஷமோ திருமண தோஷமோ அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியரோ இதுபோல் வழிபாட்டை செய்யலாம். இந்த தருணத்திலே யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் மீண்டும் கூறுகிறோம். கேட்கின்ற மனிதர்களுக்கு இது அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறோம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது போல் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் என்றோ செய்த வினை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொண்ட பிறகு கூடுமானவரை மனம் வாக்கு (சொல்) காயம் (உடல்) இவற்றால் பிறருக்கு எந்தவிதத் துன்பமும் செய்யாமல் வாழப் பழக வேண்டும். வெறும் வார்த்தைதானே என்று வார்த்தையால் பேசி யாரையும் துன்புறுத்தாமல் கூடுமானரை பேசினால் இறை நாமம் அல்லது சத்செயல் அல்லது நாம சங்கீர்த்தனம் அல்லது ஏற்புடைய சொல் என்று வைத்துக் கொண்டு இயன்றளவு உடல் ரீதியாகத் தொண்டும் வாய்ப்பும் மனமும் உள்ளவர்கள் தனம்தனை இழந்தாவது தர்மத்தையும் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் எல்லா வகையிலும் வருகின்ற துன்பம் குறையும். ஆனால் இது நான் ஈட்டிய பொருள். நான் எதற்கு பிறருக்குத் தர வேண்டும்? என்ற மனப்பான்மையோடு இருப்பவர்கள் அவன் செய்த பாவம் அவன் வறுமையில் வாடுகிறான். அதில் தலையிட்டு அவன் விதியை நான் ஏன் மாற்ற வேண்டும்? என்று விதண்டாவாதம் செய்பவர்கள் இப்படியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால் அவன் சோம்பி இருக்க மாட்டானா? என்று அறிவு பூர்வமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசக்கூடியவர்கள் அவரவர்கள் வழியில் செல்லலாம்.
இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும் தொடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு போல் தோன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தொடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும் இறைவனருளால்.