அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றும் யாவர் வாழ்விலும் நலமே நடக்கும் என்பதை காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) யாம் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நல்லதை எடுத்து கூறினாலும் எத்தனைதான் கூறினாலும் இதுபோல நலமான எண்ணங்கள் நலமான வாக்குகள் நலமான செயல்பாடுகள் என்பது மனிதரிடம் குறைந்து கொண்டுதான் வருகிறது. இதுபோல் நிலையிலே இரண்டு வகையான கண்ணோட்டங்களை இறைவன் அருளை கொண்டு யாம் இத்தருணம் ஆழி தாண்டி (கடல் தாண்டி) வந்திருக்கும் இந்த சேய்களுக்கு கூறுகிறோம். ஒன்று தேகத்தை பெற்ற மனிதன் அந்த தேகத்திற்குள் இருக்கின்ற ஆன்மாவை புரிந்து கொள்வது என்பது கடினம். கடினம் என்பதற்காகவே புரிந்து கொள்ளவே முயற்சி செய்யாமலிருப்பதும் மடமை. இதுபோல் புரிந்து கொள்ளவும் ஒரு வினைப் பயன் வேண்டும் என்பது உண்மை. வினைப்பயன் ஒத்துழைப்பு தராவிட்டாலும் போராடி இறையை வணங்கி வணங்கி புரிந்து கொள்ள வேண்டும். ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? எதற்காக புரிந்து கொள்ள வேண்டும்? என்ன அவசியம்? என்று மனித மனம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும். இறைவன் அருளால் யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது என்னவென்றால் மனிதனின் மனமும் எண்ணங்களும் பெரும்பாலும் உடலெடுத்து அந்த உடலுக்குள்ளே நீக்கமற ஆன்மா நிரப்பப்பட்டு இறைவனால் படைக்கப்பட்டிருப்பதால் மனிதனால் தான் வேறு தன் உடல் வேறு என்று அத்தனை எளிதாக பிரித்துப் பார்க்க இயலவில்லை.
எதற்காக அப்படி பார்க்க வேண்டும்? என்பது அடுத்ததொரு வினா (எழும்). இருதயம் இயங்குகிறது. எனவே குருதி எல்லா நாளங்களிலும் பாய்கிறது. குருதிதான் மனிதன் இயங்க வேண்டிய சக்தியை தருகிறது. எலும்பு இருக்கிறது. எனவே மனிதனுக்கு ஒரு உறுதியான கட்டமைப்பை அது தருகிறது. நரம்புகள் எல்லா பக்கங்களிலும் செல்கிறது. அது உணர்வுகளை எடுத்து செல்கிறது. சுரப்பிகள் சுரந்து அதற்கு ஏற்றார் போல் மற்ற விஷயங்களைத் தூண்டி விடுகிறது. சிந்தனையை மூளை செயல்படுத்துகிறது. உடலில் இப்படி ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பணியை செய்ய இவைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மனிதனாகிறான். இவைகளெல்லாம் பழுதடைந்து விட்டால் இவைகளில் மிகப்பெரிய பிணி பீடித்து விட்டால் மனிதனால் முழுமையாக இயங்க முடியவில்லை. சோற்வுற்று படுத்து விடுகிறான் அல்லது முற்றிலும் இறந்து விடுகிறான். இதில் எங்கே இருக்கிறது ஆன்மா? அல்லது உயிர் என்று ஒன்று இருக்கிறதா? இந்த தேகமெங்கும் அப்படி ஏதாவது பரவியிருந்தால் அதை புறக்கண்ணால் பார்க்க முடியாதா? புறக்கண்ணால் பார்க்க முடியாத புற செவியால் உணர முடியாத நாசியால் நுகர முடியாத நாவால் சுவைக்க முடியாத ஒன்றை இருக்கிறது என்று நம்பு என்றால் நான் எப்படி நம்புவேன்? என்பது மனிதனின் வாதம். ஆனால் எல்லாம் வெளிப்படையாக பிற அங்கங்களால் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால் விலங்குகளும் ஆன்ம முன்னேற்றம் பெற்று விடலாமே. சில விலங்குகள் பெற்று இருக்கின்றன என்பது விதிவிலக்கு. எனவே அப்படி புரிந்து கொள்வதற்கு மனிதன் ஏராளமான முயற்சிகளையும் உழைப்பையும் மெய்யான மெய்ஞானம் நோக்கி திசை திருப்ப வேண்டும்.