அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
கோடிக்கணக்கான பிறவிகள் கோடிக்கணக்கான உயிர்கள் பாவங்களை செய்து செய்து எகுதாவது ஒரு பிறவியிலே பாவங்கள் அற்ற நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்று இறைவனால் அருள் ஆசி வழங்கப் பெற்று அந்த எண்ணம் உதிக்கும் வண்ணம் கிரக நிலை இருக்கும் வண்ணம் ஒரு பிறவி கொடுக்கப்படும் தருணம் அதே விதி அந்த மனிதனை மேலும் குழப்ப துவங்குகிறது. எப்படி?
வினைகளை முற்றிலும் களைந்து பாவங்களே செய்யாத ஒரு நிலையை நோக்கி சென்று தெய்வீக விழிப்புணர்வு பெற்ற ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் சிற்றறிவு நினைக்கும் பொழுதே அந்த அறிவை ஆட்சி செய்யும் விதி இப்படி எல்லாம் வாழ்ந்தால் எப்படியப்பா இந்த உலகில் வாழ முடியும். இந்த உலகில் வாழ்வதற்கு செல்வம் வேண்டாமா செல்வம் இல்லாதவர்கள் இந்த உலகில் எப்படி கடினப்படுகிறார்கள்? கையில் கிடைத்ததை நீயெல்லாம் தர்மம் செய்து விடாதே வேறு எந்த நல்ல செயலுக்கும் அதை பயன்படுத்தாதே உனக்கென்று அதை வைத்துக்கொள். உன்னுடைய அதிர்ஷ்டம் காரணமாக உனக்கு கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் வறுமையின் போது நீ எப்படி வேதனை பட்டாய். இனி உனக்கு வறுமை வந்தால் யாரும் உனக்கு உதவ மாட்டார்கள். எனவே இதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று விதியே அவன் மூலையில் அமர்ந்து கூட சொல்லி விடும். நிறைய தர்மம் செய்த மனிதர்கள் அந்திம (கடைசி) காலத்தில் நிறைய சிரமப்பட்டு இறந்து போய் இருக்கிறார்கள். எனவே இப்படி தர்மம் செய்வதால் பெரிய பலன் ஒன்றும் இதனால் இருக்க போவது இல்லை. அடுத்த ஜென்மம் என்ற ஒன்றை நம்மால் உணர முடியாது புரிந்து கொள்ள முடியாது. எனவே நடப்பு ஜென்மமே மெய் இந்த ஜென்மத்திற்கு உண்டான செயலை மட்டுமே செய் என்று விதியே சூழ்ச்சியாக சொல்லித் தருமப்பா.
எனவே இந்த மாயா வாதங்களை எல்லாம் விட்டு விலகி அருள் ஞான கருத்துக்களை மீண்டும் மீண்டும் மனதிலே அசை போட்டு தெளிந்த நீரோடை போன்ற தெய்வீக ஞானத்தை அடைதல் மட்டுமே மனிதன் நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பெற்று வாழக்கூடிய நிலையாகும். இல்லை என்றால் காலம் மாற மாற மனிதன் பயன்படுத்த கூடிய பொருள்கள் மாறும். பொருள்கள் மாற மாற அந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய மனிதனின் வாழ்க்கை மாறும். வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும்.