அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
மனிதர்களை எதற்காக சித்தர்கள் நடமாட விட வேண்டும்? கட்டுப்படுத்தக் கூடாதா? என்ற ஐயம் பலருக்கு இருந்தாலும் கூட இந்த உலகிலே இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். இன்னும் பல்வேறு நிலைகளில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எனவே இவையெல்லாம் உலக இயக்கத்திற்கு கர்மக் கழிவிற்கு கர்ம பாவங்களின் பரிவர்த்தனைக்கு என்று இறைவனால் அந்தந்த மனிதனின் பூர்வீக வினைகளால் கொடுக்கப் படுவதாகும். எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் கர்மக் கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். எங்ஙனம் மின் சக்தியானது முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் அதற்கு நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இருமுனை இணைப்பு தேவைப்படுகிறதோ அது போலத்தான் இந்த உலகிலே நல்லோரும் தீயோரும் இருக்கிறார்கள். ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு அது போக தீயவனிடம் இருக்கக் கூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்குத் தருகிறான் என்பதே பொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகி விட்டால் அனைத்தும் மிக எளிதாக மிக நீதியாகத் தோன்றும்.
தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தை பொறுத்தது அல்ல. எனவே எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல் வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து மனதை பக்தியிலே ஆழ்த்தி மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து வேறு உலக சிந்தனை ஏதும் எழா வண்ணம் இறையை இல்லத்தில் இருந்து பூஜித்தாலும் அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூஜையாக இருக்குங்கால் இறைவனின் அருளும் இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா. இதுபோல நிலையிலே இறைவனின் அருளாசி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.