கேள்வி: முக்தி என்றால் என்ன? முக்தி ஸ்திதி என்றால் என்ன? அதற்குரிய சாதனைகள் என்னென்ன? ஒரு சாதகன் எந்தெந்த சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் ?
இறைவனின் கருணையால் இயம்புவது யாதென்றால் முத்தி என்றால் என்ன? முற்றிய நிலை என்று கொள்ளலாம். ஒரு வகையான ஒரு உயர்வான நிலை என்றும் கொள்ளலாம். சிப்பி என்ற கூட்டுக்குள் விழுகின்ற தூய நீர் முற்றி முத்து ஆவது போல. இதுபோல் தேகம் என்னும் சிறிய கூட்டுக்குள் அடைபட்டு அடைபட்டு பிறவிகள் எடுத்து எடுத்து மாயா வாழ்வில் சிக்கி உழன்று உழன்று தவிக்கின்ற ஆத்மாக்கள் அதிலிருந்து விடுபட்டு ஒரு முற்றிய நிலை. அந்த நிலையை நோக்கி செல்லுதல் அல்லது அடைதல் முக்தி எனலாம்.
விடுதல் அது நீழ்ச்சி பெற்று அது வீடுபேறு ஆயிற்று. விடுதல் என்றால் எதிலிருந்து? எவையெல்லாம் மனிதனுக்கு முதலில் இன்பமாய் தோன்றி பிறகு நிரந்தர துன்பத்தைத் தருகிறதோ அவை அனைத்திலிருந்தும் மனிதன் விடுபட வேண்டும். எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் கூடிய மனோபாவத்தை அந்த மனோநிலையை வைராக்கியம் கொண்டு எவனொருவன் வளர்த்துக் கொள்கிறானோ இதுபோல் ஒவ்வொரு மனிதனும் துயிலும்பொழுது கனவு காண்கிறான். ஆனால் என்றாவது காண்பது கனவு என்று உணர்கிறானா? கனவிலே அச்சமூட்டும் நிகழ்வு என்றால் அஞ்சுகிறான். மகிழ்வைத் தரும் நிகழ்வு என்றால் மகிழ்கிறான். அதைக் காணும் பொழுது கனவு என்று உணராமல் விழித்த பிறகுதான் கனவு என்று உணர முடிகிறது. ஆனால் அதை இப்படியே என்றென்றும் விழிப்பு நிலையிலேயே இருந்து உணர்ந்து பார்க்கின்ற ஒரு கலை அதாவது வாழும் பொழுதே இவ்வாழ்க்கை மெய்யல்ல பொய். வினைகளை நுகரத்தான் இந்த வாழ்வு.
இப்பொழுது நடப்பதும் பார்ப்பதும் சொப்பனம். விழிப்பு நிலை ஜாக்ரதா நிலை என்பது வேறு என்பதை உணர்ந்து இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே வினைகளை நுகர்ந்து கொண்டே இடைவிடாத இறை சிந்தனையோடு எவனொருவன் அந்தப் பரம்பொருளை நோக்கி செல்கின்ற முயற்சியை விடாது செய்கிறானோ அப்படி செய்கின்ற அந்த மனிதனின் ஆத்மாவிற்கு இறுதி நிலையில் கிட்டுகின்ற ஒரு முற்றிய நிலை முக்தி நிலை. இதற்கு வைராக்யமும் பற்றற்ற தன்மையும் 100 க்கு 100 விழுக்காடு சத்தியமும் தர்மமும் தேவை. இதனை விட்டுவிட்டு வேறு எத்தனை மந்திரங்களை ஒருவன் உருவேற்றினாலும் மனம் பக்குவப்படாத நிலையில் இந்த முக்தி என்கிற ஒரு உயர் நிலையை அடைவது கடினம்.