கேள்வி: என் மனைவியிடம் ஆன்மீக விஷயங்களில் பொய் சொல்லி ஈடுபட வேண்டியிருக்கிறது:
உன் போன்ற பலருக்கும் இதே நிலைதான். அப்படியே செய் என்று ஊக்குவிப்பதும் கூறுவதும் ஒரு மகானுக்கு அழகல்ல. அல்லது உண்மையைக் கூறி இல்லத்திலே குழப்பத்தை ஏற்படுத்துவதும் மகான்களுக்கு அழகல்ல. எம் போன்ற ஞானி உலகியல் ரீதியாக இது குறித்து ஒரு யோசனையைக் கூறினாலும் அது ஞான நிலைக்கு ஏற்புடையதாக இராது. ஞானப் பார்வையிலே ஒரு யோசனையைக் கூறினால் உன் போன்ற மனிதனுக்கு அது ஏற்புடையதாக இராது. இரண்டையும் அனுசரித்து கூறுவது என்னவென்றால் எல்லா இல்லங்களிலும் தாயோ தாரமோ இது போன்ற ஆன்மீக அமைப்புகளை விரும்பாததின் காரணம் இதனால் குடும்ப நடைமுறை செலவினங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான். எனவே குடும்பத்தை பாதிக்காமல் உன் போன்ற ஒருவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாங்கள் அதை வரவேற்கிறோம். அல்லது இயல்பாகவே உன் மனம் முதிர்வடைந்து இந்த அளவில் குடும்பத்திற்கு செய்தால் போதும் இதனை தாண்டி செய்வதெல்லாம் வீண் விரயம்தான். அவற்றையெல்லாம் புண்ணியமாக மாற்றி வைத்துக் கொண்டால் அது குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு உதவும் என்ற எண்ணம் அழுத்தந்திருத்தமாக உன் மனதிலே வந்து விட்டால் அவர்கள் விரும்புவதைப் போல ஒரு சொல்லாடலை பயன்படுத்திவிட்டு உன் விருப்பம் போல் செய்யலாம். எனவே இந்த இடத்தில் உண்மையைக் கூறினால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் உண்மையைக் கூற வேண்டிய அவசியமில்லை. பொய்யைக் கூறு என்று ஜீவ நாடியில் ஞானிகளே கூறிவிட்டார்கள் என்ற அபவாதத்திற்கு ஆளாகவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே மௌனத்தைக் கடைபிடி. அதே தருணம் தாரத்தின் நிலையில் என்ன குழப்பம் ஏற்படும்? என்றால் கணவன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழாத அளவிற்கு அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உன் போக்கில் நீ செல்லலாம்.