கேள்வி: சத்ருசம்ஹார யாகத்தை எப்படி செய்வது ?
பொதுவாக சம்ஹார யாகத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்குவது சிறப்பு. ஆனால் இதற்கு ஆலயத்து விதிமுறைகள் இடம் தராது என்பதை யாம் அறிவோம். எனவே அதிகாலை துவங்கினாலும் சாயரட்சை வரையாவது செய்வது நல்லது. இடையிலே அவசியம் ஏற்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதலில் வழக்கம் போல் மூத்தோனுக்கு யாகம் செய்துவிட்டு பிறகு தொடர்ந்து சத்ருசம்ஹார யாகத்தை செய்யலாம். கடைசியாக ஒரே பூரணாகுதியை தந்துவிட்டால் போதும். இதிலே கால அவகாசத்திற்கு ஏற்ப மந்திரங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிப்பில் பிழையின்றி சொல்வதும் எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஏதோ கடமைக்கு அக்னியில் வார்ப்பது போல் இல்லாமல் பொருள்களை பயபக்தியோடு பவ்யமாக நிதானமாக பொறுமையாக பயன்படுத்துதல் சிறப்பை தரும். 300 மந்திரங்கள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் மனிதர்களை அமரவைத்து உரத்த குரலிலே உச்சரிப்பு பிழையின்றி ஆத்மார்த்தமாக உச்சரித்து உச்சரித்து ஒவ்வொன்றிற்கும் பூர்த்தி முடிவிலே பொருள்களை யாகத்தீயில் வார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.