ஆஞ்சனேயர் வாய்பொத்தி இருப்பதின் தாத்பர்யம் என்ன ?
இறைவனின் கருணையைக்கொண்டு யாம் கூறவருவது யாதென்றால் இதுபோல் முற்றிய கதிர் வளைந்தே இருக்கும். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். அதைப்போல பரிபூரண ஞானத்தன்மையும் பரிபூரண இறையாற்றலை உள்ளே உணர்ந்து கொண்ட எந்தவிதமான ஆத்மாவும் அல்லது இறையின் அம்சம் தானாக இருந்தாலும்கூட பணிந்து ஒன்றுமே இல்லாத நிலையில் தான் ஒன்றுமேயில்லை என்பதுபோல் காட்டிக் கொள்வதுதான் பெரியதின் விளக்கம். என்றுமே பெரியது சிறியதாக இருக்கும். சிறியது பெரியதாக இருக்கும். இதனால்தான் தமிழ் எழுத்திலே சிறியது சிறியவர் என்று சொல்லும் பொழுது அங்கே பெரிய எழுத்தையும் பெரியது என்று கூறும் பொழுது அங்கே சிறிய எழுத்தையும் எழுதுகின்ற வழக்கம் வந்தது. எனவே ஒரு மனிதன் வளர வளர ஒரு ஆத்மா வளர வளர தனக்குள் அதிக ஆற்றல் இருப்பதாக தற்பெருமை பேசாமல் அப்படியாக நயந்து நயந்து பணிந்து பணிந்து எந்தளவிற்கு பணிய முடியுமோ அப்படி பணிவதே சிறப்பாகும். எனவே ஆஞ்சனேயர் யார்? முக்கண்ணன் யார்? முக்கண்ணன் வேறு ஆஞ்சனேயர் வேறா? அதிருக்க நிலையிலே அதுபோல் பேதங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்று பட வேண்டும் என்ற கருத்திலே முக்கண்ணனாகிய நான் ஆஞ்சனேயராக இருந்தாலும் கூட மஹாவிஷ்ணுவின் அவதாரத்திற்கு முன்னால் பணிந்து தாழ்ந்து இருக்கிறேன் என்பதுதான் பொருள். எனவே உயர ஒரு மனிதன் பணிய வேண்டும் என்பதின் உட்பொருளே இது.