ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 419

கேள்வி: கடைவிரித்தேன் கொள்வாரில்லை இது வள்ளலாரின் ஆதங்கம். கடந்த 9 ஆண்டுகளாக ஞானக் கருத்துக்களை தொடர்ந்து கூறிவந்தும் ஒருவர் கூட கடுகளவு கூட தேறவில்லை என்பதே கசப்பான உண்மை. இது தங்கள் ஆதங்கம். இரண்டிற்கும் வேறுபாடில்லை. நாங்கள் என்ன செய்வது?

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் காலகாலம் உயர்ந்த கருத்துக்களும் விஷயங்களும் ஞானக் கருத்துக்களும் பலரால் பல மகான்களால் போதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றை பல மனிதர்கள் கேட்டாலும் சிலர்தான் பின்பற்ற முடியும். சிலரில் சிலர்தான் உறுதியாக பின்பற்ற முடியும். இது போதிக்கின்ற மகான்களுக்கு தெரிந்தாலும் கூட பிள்ளைகள் இப்படி தவறான வழியில் செல்கிறார்களே? இந்த செல்வங்கள் உண்மையான ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கூறினாலும் நான் உணர்ந்ததை அறிந்ததை பெற்றதை இவர்களும் பெற வேண்டும் என்று எண்ணி உரைத்தாலும் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே? என்ற ஆதங்கத்தில் கூறுவதுதான். இறைவனின் அருளாலே மகான்களுக்கு எதை செய்தாலும் அதன் எதிர்பார்ப்பும் விளைவும் எப்படியிருந்தாலும் பாதகமில்லை இறைவன் இட்ட கட்டளையை செய்ய வேண்டும். இந்த காலத்தில் இந்த ஜென்மத்தில் இந்தந்த பிறவிக்கு இந்தந்த ஞானத்தை போதிக்க வேண்டும். அதை இந்தந்த மனிதர்கள் பின்பற்றுவார்கள். இந்தந்த மனிதர்கள் கேட்பார்கள் பின்பற்ற மாட்டார்கள். இந்தந்த ஜென்மங்கள் தாண்டி அவர்களுக்கு இந்த ஞானக் கருத்துக்கள் உதவலாம் என்று தெரிந்துதான் போதிப்பார்கள். இருந்தாலும் மனித உடலெடுத்த பிறகு எத்தனை பெரிய ஞானியாக இருந்தாலும் சில ஆதங்கங்களும் எதிர்பார்ப்புகளும் வந்து விடுகிறது. அதன் விளைவுதான் அவன் கடைவிரித்தேன் என்ற வாசகத்தைக் கூறியது.

யாங்களும் எத்தனை ஞானக் கருத்துக்களை கூறினாலும் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பாவங்கள் மனிதர்களை திசைமாற வைக்கிறதே? தடுமாற வைக்கிறதே? என்றுதான் கூறுகிறோம். அதனால்தான் அடிக்கடி யாங்கள் கூறுவது பாத்திரத்தை சுத்தி செய்து பிறகு பாலைக் காய்ச்சினால் பால் நன்றாக இருக்கும். பாவங்களை வைத்துக் கொண்டு எத்தனைதான் ஆன்மீகம் பேசினாலும் இறைவனை வணங்கினாலும் அந்த பாவங்கள் இறையாற்றலை சரியாக உணர விடாது. எனவே ஒன்று பாவங்களை அனுபவித்து தீர்க்க வேண்டும் அல்லது தர்ம காரியங்களால் தீர்க்க வேண்டும் அல்லது மந்திர ஜெபத்தால் தீர்க்க வேண்டும் அல்லது ஸ்தல யாத்திரையால் தீர்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் பாவங்களைத் தீர்க்கிறேன் என்று ஒருபுறம் பரிகாரங்கள் செய்து கொண்டே தர்மங்கள் செய்து கொண்டே இன்னொருபுறம் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டே உதாசீனம் செய்து கொண்டே பலரை நோகடித்துக் கொண்டே இருந்தால் அதனால் எந்த விதமான பலனும் இல்லை. எனவேதான் விதவிதமான ஞானக் கருத்துக்களை யாங்கள் போதித்தும் அதனை சரியாக புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்களே? தடுமாறி தடுமாறி மக்கள் மாய்ந்து வாழ்கிறார்களே? என்ற நோக்கில் யாங்கள் அதனை கூறியிருக்கிறோம். என்றிருந்தாலும் ஒவ்வொரு ஆத்மாவும் கடைத் தேறத்தான் வேண்டும்.

அது இன்றே இப்பொழுதே இத்தருணமே இக்கணமே கடைத்தேறினால் நன்றாக இருக்குமே? அதற்குதானே நாங்கள் இறைவனருளால் வழிகாட்டுகிறோம் என்றும் அதோடு மட்டுமல்ல எதையெதை எப்படியெப்படி உணர்வது? என்றெல்லாம் கூட நாங்கள் அவ்வப்பொழுது கோடிட்டுக் காட்டுகிறோம். இதழ் ஓதுகின்ற இன்னவன் மூலமும் சில விஷயங்களை செய்து காட்டுகிறோம். என்ன செய்தாலும் எதைப் பார்த்தாலும் எங்கள் உள்ளம் எங்கள் மனம் எங்கள் சிந்தனை எப்படியெல்லாம் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல்தான் இறைவனும் சித்தர்களும் வரவேண்டும் என்று மனிதர்கள் எண்ணும் பொழுது அங்கேதான் சித்தர்களுக்கு, மனிதர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. இந்த இடைவெளி குறைய வேண்டும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே இடைவெளியை குறைக்க வேண்டும் என்றுதான் யாங்கள் வந்திருக்கிறோம். ஆனால் அந்த இடைவெளியை குறைக்கவே மனிதர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். இடைவெளி குறைய நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே என்னென்ன இடைவெளி இருக்கிறது? என்பது மனிதர்களுக்கே தெரியும். அவனுடைய ஆசை பாசம் பற்று அவனுடைய எதிர்பார்ப்பு சினம் இவையனைத்தும் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி. இவற்றையெல்லாம் மெல்ல மெல்ல விட்டுவிட்டால் இறையோடு மனிதன் நெருங்குவான்.

இறையோடு மனிதன் நெருங்க நல்ல மாற்றங்களை ஒரு மனிதன் உணர இயலும். நிரந்தர நிம்மதி சந்தோஷம் வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறான். அதற்கு வழிகாட்டினால் அந்த வழியில் செல்லத்தான் மனிதர்களுக்கு அச்சமாக தயக்கமாக குழப்பமாக இருக்கிறது. அதை மாற்றத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். இதனை சரியாக புரிந்து கொண்டு எம் வழியில் இறை வழியில் எம் சேய்கள் வர நல்லாசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.