ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 42

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி எல்லாம் எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக (கசப்பாக) தோன்றும். எனவே இப்படி இந்த உலகை உலகை சுற்றி உள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் போது எண்ணி வருத்தப்படுகிறான். அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்கள் மற்றும் தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகார்த்தமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.

யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்து அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்ப கோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும் பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.