ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 47

கேள்வி: சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட அதை ஏழைகளுக்கு கொடுப்பதைப் பற்றி?

ஒருவனின் மனம் புத்தி அறிவு ஞானம் இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு இதை பொறுத்துத்தான் இந்த வாதத்தை எடுத்துக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதரிடம் நீ தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று நாங்கள் கூறினாலும் அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால் பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி என்றால் அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பொருள்கள் வாங்குகிறான் அந்த வியாபாரம் செழித்து வளரட்டும். அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேருகிறது அல்லவா? அந்த அடிப்படையிலும் இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும் அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்க வேண்டும். அப்படியாவது சிறிது கர்மா இவனுக்குக் குறையட்டும் என்றுதான் கூறுகிறோம்.

அதே சமயம் ஒரு உயர்ந்த பொருளை ஏன் ஒரு கல்லின் மீது ஊற்ற வேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா? என்று ஒரு வாதத்தை வைக்கும் பொழுது ஒருவனுக்குப் பிரியமான தந்தை தாய் மனைவி மக்கள் போன்றோர்களின் பிம்பங்களை களங்கப்படுத்து அதன் மீது எச்சில் உமிழ் என்றால் உமிழ்வானா?. எனவே அந்த பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது சிலை என்று கருதக்கூடிய மனிதனுக்கு அது வெறும் சிலை. ஆனால் அது உள்ளே தெய்வம்தான் என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் அதன் மூலம் மன அமைதியும் வரும். எடுத்த எடுப்பிலேயே நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு கொடு என்று சொன்னால் அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா காலப்போக்கில் திருந்துவான் என்றால் அவனை அவன் போக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவோம். எனவே இதில் யார் செய்வதும் குற்றமல்ல பாதிப்பும் அல்ல இரண்டு வழிகளுமே சிறப்புதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.