கேள்வி: கோவில்களில் இருக்கும் சப்தமாதாக்களின் பெருமையை பற்றியும் அவர்களினால் மக்கள் அடையும் நன்மைகள் பற்றியும்:
இறைவன் அருளால் சப்தமாதாக்கள் அல்லது சப்த கன்னியர்கள் சப்த ரிஷிகள் பற்றி முன்பு கூறிய வாக்குகள் இவர்களுக்கும் பொருந்தும். சப்த மாதாக்களை எங்கே ப்ரதிஷ்டை செய்திருப்பார்கள்? என்றால் தட்சிணாமூர்த்திக்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஞான வாழ்க்கைக்கும் பரிபூரண ஞானத்தை புரிந்து கொள்வதற்கும் ஞான அருளை பெறுவதற்கும் இதுபோல் அம்பாளின் வடிவங்கள்தான் சப்தமாக பிரிந்து மனிதர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் ஞானத்தை இறைவனிடமிருந்து வாங்கிக் கொள்வதற்காகவும் வாங்கி மனிதர்களுக்கு தருவதற்காகவும்தான் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து அவர்களும் மௌன தவத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு மனிதன் சித்தர்கள் வழியில் வரவேண்டும் சித்தர்கள் அருளைப் பெறவேண்டும் என்றால் அதற்கு சப்தமாதாக்களின் வழிபாடு மிகவும் முக்கியமாகும். இதுபோக இன்னும் உபரியாக இந்த மாதாக்களின் வழிபாடுகள் அதிகம் உண்டு. இதுபோன்ற சக்திகளில் அஸ்வாரூடா என்ற சக்தியும் இருக்கிறது. இந்த அஸ்வாரூடா தேவதை என்பது குதிரைமீது அமர்ந்து பவனி வருவதுபோல் இருக்கும். இந்த தேவதையை வழிபட்டு இதுபோல் சாஸ்திரப்படி பூஜைகள் செய்தாலும் எதிரிகளின் தாக்கமும் எதிர்ப்புகளின் தாக்கமும் குறையும்.
இது போல சப்த மாதாக்களின் ஒட்டுமொத்த வழிபாடு ஞானத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உலகியல் வாழ்க்கையிலே குறிப்பாக பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகள் குறைவதற்கு சப்தமாதாக்கள் வழிபாடு மிகவும் உதவும். அனாச்சாரமில்லாமல் ஆத்மார்த்தமாக ஆலயம் சென்று சப்த மாதாக்களை அமைதியான முறையில் வழிபட்டுவர நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஆனால் சப்த மாதாக்களை புடைப்பு சிற்பமாக வைப்பது எமக்கு ஏற்புடையது அல்ல. தனித்தனி சிற்பமாக முழுக்க ஆடை அலங்காரம் செய்வதுபோல் அமைத்து வழிபாடு செய்வது ஏற்புடையது. நாங்கள் முன்பே கூறியிருக்கிறோம்.இல்லத்திலே சப்தமாதாக்களை வைத்து வழிபட முடியாத நிலையிலே ஏழு மஞ்சள் துண்டங்களை வைத்து பெண்கள் சுக்ரவாரம் தோறும் குங்கும அர்ச்சனை செய்து மலர்கள் தூவி வழிபட்டால் களத்திர தோஷம் குறையும். உள்ளன்போடு ஏழு வாரம் செய்தாலே நல்ல மாற்றத்தை உணரலாம்.