ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 48

கேள்வி: மந்திரம் சொல்லும் போது

நா வறட்சி ஏற்படாமல் இருக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வதும் கனி வகைகள் ஆவியிலே வெந்த உணவு பொருட்கள் கீரை வகைகள் உட்கொள்வதும் உடல் சோர்வை அகற்றும். அதோடு சமைத்த உணவை விட கனி வகைகள் நல்ல பலனை தரும். மந்திரங்களை எந்த மொழியில் சொன்னாலும் ஒரே வகையான பலனைத்தான் தரும். ஆனால் அதை விட எந்த மனநிலையில் மந்திரங்களை ஜெபிக்கிறாய் என்பதுதான் முக்கியம். அதிகம் அதிகம் மந்திரங்களை நாங்கள் உரு ஏற்றச் சொல்லும் காரணமே அந்த நீண்ட கால அவகாசத்திலே இடையிலே ஒரு சில கண் இமைக்கும் நேரத்திலாவது மனிதன் மனம் ஒன்றி அதை சொல்ல மாட்டானா? என்பதற்காகத்தான் ஒரு லட்சம் மந்திரத்தைக் கூறு என்றால் ஒரு லட்சம் தரம் அவன் மனம் ஒன்றியா கூறப் போகிறான்? அதனால்தான் இப்படி கூறுகிறோம். சமஸ்கிருத மொழியில் சொல்ல முடியவில்லை என்றால் தமிழிலேயே

ஓம் சுக்ரன் திருவடிகள் போற்றி
ஓம் குபேரன் திருவடிகள் போற்றி
ஓம் அன்னை மகாலட்சுமி திருவடிகள் போற்றி
ஓம் ஐஸ்வர்யா ஈஸ்வரர் திருவடிகள் போற்றி என்றும் கூறலாம். தவறு ஏதுமில்லை.

கேள்வி: ஸ்தல விருட்சத்தின் பழம் சாப்பிட்டால் தோஷமா?

ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் இலைகளையோ வேர்களையோ காய் கனிகளையோ முறையற்று பயன்படுத்தினால் தோஷம் வரும் என்பது உண்மைதான். இது ஒரு புறம் இருக்கட்டும் அது எப்படியப்பா அம்மனுக்கு போட்ட நகையை களவாடும் போது வராத தோஷம் கனிகளை எடுக்கும் போது வந்து விடுமா?

கேள்வி: எருமை மாட்டிற்கு மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரை கொடுப்பதால் உயிர் பிரியும் தருணம் துன்பமாக இருக்காது என்று சொல்லப்படுவது பற்றி

இது போல் வாங்கிக் கொடுப்பது சிறப்பு. இதை மட்டும் செய்தால் பாவம் தீர்ந்து விடாது. என்ன செய்யும் வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாவம் செய்வது எளிது. ஆனால் ஒரு பாவத்தை கழிப்பது என்பது மிக மிகக் கடினம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.