கேள்வி: ஆலய சிலாரூபங்களை தூய்மைப்படுத்தும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தினால் தெய்வங்களுக்கு வலிக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் எதைப் பயன்படுத்தி சிலாரூபங்களை தூய்மைப்படுத்துவது?
இறைவனின் கருணையால் யாங்கள் இயம்புகிறோம். இறைவனின் சிலாரூபங்களை சேதப்படுத்துவதாலோ அல்லது மனித பார்வையிலே அவமானப் படுத்துவதாலோ அல்லது அதனை கூரான ஆயுதங்களால் சுத்தப்படுத்துவதாலோ வலிக்கிறது என்பதை விட மனிதர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுதுதான் இறைவனுக்கு அதிகமாக வலிக்கிறது. எனவே மனிதர்கள் தன்னை திருத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்த குணங்களைக் கொண்டவனாக வாழ்ந்துவிட்டு தன்னை தூற்றினாலும் கூட இறைவன் முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இருந்த போதிலும் கூட அற்புதமான சிலாரூபங்கள் பல்வேறு பக்தர்களுக்கு இறைவனாகவே காட்சி தருவதால் அதனை கையாளும் போது கவனம் வேண்டும்.கூர்மையான ஆயுதங்களை தவிர்ப்பது நல்விதமான வேறு முறைகளை கையாள்வது நல்ல பலனை நல்கும். இதுபோல் நல்விதமாய் சாத்வீகமான பொருள்களை பயன்படுத்தி சுத்தி செய்கின்ற முறைகள் இருக்கின்றன. மூலிகை சாறினை பயன்படுத்தலாம். உயர்வான முறையிலே தயிரை எடுத்து அதோடு அரிசி மாவினையும் கடலை பருப்பை மாவாக்கி அதனையும் பச்சைப் பயிறை மாவாக்கி அதனையும் சேர்த்து நல்விதமாக சிலாரூபங்கள் முழுவதும் தேய்த்து தூய்மையான பருத்தி துணி கொண்டு அதனை மென்மையாக தேய்த்து சுத்தி செய்யலாம். அரசக்கனியின் சாற்றைக்கொண்டு சுத்தி செய்யலாம். இது போன்ற சில முறைகளை கையாள்வது சிறப்பு.