கேள்வி: அரசண்ணாமலையின் தெய்வீக சிறப்புகள் பற்றி :
இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் நல்விதமாய் ஒரு குறிப்பிட்ட மலை அல்லது குறிப்பிட்ட ஸ்தலம் மட்டுமே உயர்வல்ல. இருந்தாலும் கூட மனிதர்களின் ஆர்வம் மிகுதியாலும் சில பல காரணங்களாலும் இவ்வாறு கேட்பதால் நாங்கள் கூறுகிறோமே தவிர எல்லா ஸ்தலங்களும் சிறப்பே. எல்லா மலைகளும் சிறப்பே. இறை சாந்நித்யம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதை உணரக்கூடிய தன்மைதான் மனிதனிடம் இல்லை என்பதே உண்மையிலும் உண்மையாகும். இதுபோல் இன்று பாழ்பட்டு கிடக்கின்ற இன்னவன் கூறுகின்ற அரசகிரி ஒரு காலத்தில் சிறப்பாக இறையருளால் நல்விதமான பூஜைகளும் சாஸ்திர சம்பிரதாயமாக சடங்குகளும் நடந்த ஸ்தலம்தான். இங்கும் கிரிவலம் வருவது சிறப்பு. ஒரு ஸ்தலம் சிறப்பு உயர்வு என்று மனிதனுக்கு தெரிந்து விட்டால் அங்கு கூட்டமாக படையெடுப்பதும் எல்லாவிதமான பூஜைகள் செய்வதையும் தவறென்று கூற வரவில்லை.
இறைவனை வணங்குவதும் ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்திலே சென்று வணங்கினால்தான் இறைவன் அருள் கிட்டும் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் தீரும் என்று எண்ணுவதும் கூட தவறல்ல. ஆனால் அப்படி எண்ணிக் கொண்டே அந்த ஸ்தலத்தை அனாச்சாரம் செய்யாமல் இருந்தால் அது சிறப்பு. ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை நோக்கி பல மனிதர்களும் சென்று இறைவனுக்கு விருப்பமில்லாத செயல்களை அங்கு செய்தால் கட்டாயம் இறையருள் என்பது யாருக்கும் கிட்டாமல் போய்விடும். பலரும் கூட்டமாக ஒரு இடத்திற்கு செல்வதோ இறைவனை வணங்குவதோ சிறப்பிலும் சிறப்புதான். ஆனால் அந்த இடத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அந்த இடத்தை பரிசுத்தமாக வைத்திருக்கிறார்களா? அங்கு பரிபூரண அமைதியை காக்கிறார்களா? வியாபார விஷயமாக அங்கு எதுவும் நடவாமல் பார்த்துக் கொள்கிறார்களா? அமைதியான முறையில் இறை நாமத்தை ஜபம் செய்கிறார்களா? என்றெல்லாம் பார்த்தால் அது மிகவும் நடக்காத செயலாகத்தான் இருக்கிறது. மனிதர்களை பொருத்தவரை பல்வேறு இடங்களில் மன மகிழ்வு மன்றம் என்றெல்லாம் வைத்திருக்கிறார்களே? அதைப்போல வெறும் லோகாயரீதியான ஒரு மன மகிழ்வு மன்றமாகத்தான் ஆலயத்தை பார்க்கிறர்களே தவிர மெய்யாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்,
தன் மனதில் உள்ள குற்றங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும். இத்தனை தீய எண்ணங்களோடு வாழ்கிறோமே? இங்கு வந்து இறைவா இறைவா என்று கதறுகிறோமே இறைவன் ஏற்றுக்கொள்வாரா? என்று ஒரு கணமாவது மனிதன் சிந்திக்க வேண்டும். இறைவன் இருக்கின்ற இடம் புனிதமான இடம் என்று கூறிக்கொண்டே அந்த இடத்தை அனாச்சாரம் செய்வது இறைவனுக்கு ஏற்புடையதா? நம் மனசாட்சிக்கு ஏற்புடையதா? என்றெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இத்தனை இறை தத்துவங்கள் இல்லாத தேசத்தில் கூட பொது இடத்தை சுத்தமாகத்தான் மனிதன் வைத்திருக்கிறான். இத்தனை தத்துவங்களும் ஞானிகளும் மகான்களும் இருக்கின்ற இடத்தில்தான் இத்தனை அறியாமைக் கூட்டம் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். இதை எப்படி கூறுவது? என்றால் அற்புதமான தாமரை மலரில் மிகவும் உயர்வான தேன் இருக்கிறது. ஒவ்வொரு மலரிலும் இருப்பது தேன்தான். இருந்தாலும் ஒவ்வொரு மலரிலும் கிடைக்கின்ற தேனிற்கு தனித்தனி ஆற்றல்கள் உண்டு. தாமரை மலரில் உள்ள தேனுக்கு பல விதமான ஆற்றல்கள் இருக்கிறது. அதுகுறித்து பிறகு சிந்திப்போம். ஆனால் அந்த தாமரையை சுற்றியுள்ள சிறு சிறு உயிரினங்கள் அந்த தேனை உண்ணுவதுமில்லை. தேன் இருப்பதை புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற வண்டினங்கள் தேனீக்கள் தேடி வந்து தாமரைப் பூவில் உள்ள தேனை உண்கிறது. அதன் பெருமையை புரிந்து கொள்கிறது. இதைப் போலதான் மனிதர்கள் இங்கும் வாழ்கிறார்கள்.
எனவே ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமையை மனிதர்கள் புரிந்து கொண்டு தாமரைப் பூவில் இருக்கின்ற தேனைப் போல இது அற்புதமான ஸ்தலம் என்பதை புரிந்து கொண்டு மண்டூகங்களாக இல்லாமல் வண்டினமாக எல்லோரும் இருக்க நல்லாசிகளை கூறுகிறோம். எனவே இந்த ஸ்தலத்திலும் ஆத்மார்த்தமான பிரார்த்தனையும் குறிப்பாய் நல்விதமாய் முழுமதி தினமன்று மலை வலம் வருவதும் வலத்தோடு மனிதன் தன் மனதை வளப்படுத்தவும் உதவட்டும் என்று நல்லாசி கூறுகிறோம்.
அரசண்ணாமலை பெருந்துறை விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் அமைந்துள்ளது.