ஆலயங்களுக்குத்தான் பசுக்களை தானம் செய்ய வேண்டுமா? அல்லது வேறு அமைப்புகளுக்கு தானம் செய்யலாமா?
இறைவனின் கருணையால் கோ ஆ எனப்படும் பசு தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் மனம் உவந்து செய்யலாம். எந்த அமைப்புக்கும் தரலாம். எந்த ஆலயத்திற்கும் தரலாம். கூடுமானவரை நல்ல முறையில் பாரமரிக்க கூடிய அமைப்பிற்கு தருவது சிறப்பு. ஆனால் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் இந்தக் காலத்தில் தர்மம் செய்வதே அரிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் யாருக்கும் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் பல ஆலயங்களில் பசுக்களை பராமரிக்க முடியாமல் அதனை வேறு எங்காவது சென்று விற்று விடுகிறார்கள். பசுக்களை தானம் செய்வது ஒரு நிலை. ஏற்கனவே பசுக்கள் இருக்கக் கூடிய ஆலயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதும் பசு தானத்திற்கு சமம்தான். இயன்ற அன்பர்கள் ஒன்றுகூடி தக்கதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு பசுக்களை பராமரிப்பதும் குறிப்பாக கொலை களத்திற்கு அனுப்பப்படும் பசுக்களையெல்லாம் நிறுத்தி அவைகளை பராமரிப்பதும் மிகப்பெரிய புண்ணியமாகும். பசுக்களை காப்பாற்று என்று நாங்கள் கூறினால் ஆடுகளை பாம்புகளை காப்பாற்ற வேண்டாம் என்று பொருளல்ல. பசுக்கள் என்பது ஒரு குறியீடு. எல்லா உயிர்களையும் அன்போடு பராமரிக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். எனவே எந்த நிலையிலும் எந்த அமைப்பிற்கும் எந்த ஆலயத்திற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பசு தானம் செய்யலாம்.