கேள்வி: தமிழ்நாட்டில் அஷ்ட பைரவர் கோவில் சீர்காழியைத் தவிர வேறு எங்கு உள்ளது? என்று சொல்லுங்கள்.
அப்படியானால் ஏக பைரவரை வணங்கினால் இந்த பலனும் வராது என்ற பொருளாகிவிடும். தாராளமாக அஷ்டபைரவரையும் வணங்கலாம். சதுர் கால பைரவரையும் வணங்கலாம். பஞ்ச பைரவரையும் வணங்கலாம். ஏக பைரவரையும் வணங்கலாம். பைரவரை வணங்காத பலரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அஷ்டபைரவர் வழிபாடு சதுர்கால பைரவர் வழிபாடு என்பதெல்லாம் குறிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பைரவரை எப்படி எந்த நாமத்தின் வணங்கினாலும் பைரவரின் அவதார நோக்கமே பாவ கர்மாவை குறைப்பதுதான். குறிப்பாக அறிந்தும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்ய நேரிடுகிறது என்று வருந்தக் கூடியவர்கள் ஒரு குடும்பத்திலே அகால மரணங்கள் அடிக்கடி நேரிடுகிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் கட்டாயம் அன்றாடம் குறைந்தபட்சம் ஐந்து ஐந்து முக நெய் தீபங்களாக பைரவர் முன்னால் ஏற்றி மானசீகமாக பைரவரின் அஷ்டோத்திரத்தையோ சகஸ்ர நாமத்தையோ பைரவர் அஷ்டகத்தையோ அல்லது அவன் அறிந்த மந்திரத்தையோ துதித்து வந்தால் கட்டாயம் இந்த தோஷம் நீங்கும். இது பக்தி வழி.
அதற்காக பைரவரை வணங்கி விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பைரவரின் வாகனம் (நாய்) வால் ஆட்டிக் கொண்டே வந்தால் அந்த பக்கம் போ வராதே என்று அதனை விரட்டினால் ஏற்றிய தீபம் வேண்டிய பிரார்த்தனை அத்தனையும் வீணாகிவிடும். எனவே உயிரினங்களையும் போற்ற வேண்டும். பைரவரையும் வணங்க வேண்டும். பல இடங்களிலேயே பைரவ வாகனத்தை வளர்த்து விட்டு தொல்லையாக இருக்கிறது என்று எங்காவது கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த பாவத்திற்கு பிரயாசித்தம் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொல்லை என்று தெரியும் அல்லவா? எதற்கு அதனை வளர்க்க வேண்டும்? எதற்கு அதனோடு போராட வேண்டும்? அதை போல் ஒரு மனிதனுக்கு பூர்வீக தோஷங்கள் கர்மங்கள் முன்னோர்கள் செய்த கடுமையான பாவங்கள் சாபங்கள் இருக்கிறதென்றால் கட்டாயம் அவன் வாழ்க்கையிலே பைரவர் வழிபாட்டை எல்லா வகையிலும் சிறப்பாக செய்ய வேண்டும். ராகு காலத்திலோ அல்லது அஷ்டமியிலோ தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அப்படி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் செய்யட்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ தாராளமாக செய்யட்டும். நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் தூய்மையான எள் எண்ணெய் தீபமும் ஏற்றலாம் குற்றம் ஏதுமில்லை. நல்ல மிளகினை அதிலே போட்டு ஏற்றலாமா? என்றால் தாராளமாக ஏற்றட்டும் தவறொன்றும் இல்லை. தீபம் மட்டும் ஏற்றினால் போதுமா அபிஷேகம் செய்ய வேண்டாமா? என்றால் தாராளமாக அபிஷேகம் செய்யலாம். அரளி பூதான் போட்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா வகையான நறுமண மலர்களையும் சாற்றலாம்.
எனவே பைரவர் வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பிதர் சாபத்தை, முன்னோர்கள் பெற்ற சாபத்தை, பாவத்தை, முன்னோர்களுக்கு இவர்கள் செய்ய தவறிய கடமையினால் ஏற்படக்கூடிய பாவத்தை, சாபத்தை நீக்கக்கூடிய மிக முக்கியமான வழிபாடு. அந்தந்த சிறப்பான ஸ்தலங்களுக்கு சென்று தான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவர்களின் இல்லத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செய்யலாம். அந்த வசதியும் இல்லாதவர்கள் சிவபெருமானின் அம்சம் தான் பைரவர் என்பதால் பைரவரின் ரூபம் கிடைக்காதவர்கள் சிவபெருமானின் ரூபத்தை வைத்துக்கூட பைரவ வழிபாட்டை இல்லத்தில் உள்ள சுத்தி உடல் சுத்தியோடு தாராளமாக செய்யலாம்.