கேள்வி: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கருவூரார் சாபம் பெற்றது பற்றி:
கருவூரான் என்றுமே கருவில் அவன் ஊரான் என்பதால் தான் அவனுக்கு அப்பெயர் இறைவனால் வழங்கப்பட்டது. மூலஸ்தானத்திலே இறையோடு இரண்டற கருவூர் பசுபதிசுவரர் ஆலயத்திலே அன்னவன் கலந்ததை யாம் என் நேத்திரம் கொண்டு பார்த்து களித்தோம். அது போல் நிலையிலே என்னதான் சித்தனாக இருந்தாலும் கூட சித்தர்கள் குறித்து பல்வேறு அனாச்சாரமான காரியங்கள் செய்ததாக கருத்துக்கள் மனிதர்களிடையே நிலவி வருகிறது. இதை தவிர்க்கவே முடியாது என்பது எமக்குத் தெரியும். இது மட்டுமல்ல அன்னவன் ஒருமுறை நெய்வேலி சென்று நெல்லையப்பரை பார்த்த பொழுது அங்குள்ள காளியிடம் ஏதோ கேட்டதாகவும் ஏதோ கிட்டியதாகவும் நெல்லையப்பர் ஏதோ மறுத்ததாகவும் அவரை சபித்ததாகவும் கூட கதை இருக்கிறது. இவை அத்தனையும் கட்டுக்கதை. இட்டுக்கதை. சித்தர்களை உயர்ந்த நிலையிலும் உயர்ந்த எண்ணத்திலும் தான் பார்க்க வேண்டும். சித்தர்கள் எது ஏதோ பானங்களை பருகுவதாகவோ வேறு விதமான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டதாகவோ கூறப்படுவதெல்லாம் இடைச் செருகல்களில் ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட இடைச்செருகல்ளில் ஒன்றுதான் இன்னவன் வினவியது. ஆனாலும் கூட அந்த ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய அத்தனை ஆலோசனைகளையும் கருவூரான் தான் தந்தான். அப்படி அந்த சிவலிங்கத்தை ஸ்தாபிக்க மூலிகை சாற்றால் சிலவற்றை செய்தான். பிரார்த்தனையின் பலத்தால் சிலவற்றை செய்து தந்தான். இதுதான் மெய்.
