கேள்வி: ஒரு ஜீவன் உடலை விட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்று நியதி இருக்கிறது. தட மாந்தர்கள் இதை எப்படி கடைபிடிக்க வேண்டும் ஐயனே?
பொதுவாக இதை பலவிதமாக கூறலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம். எம்மை பொறுத்தவரை ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தை கொடுப்பது தவறல்ல. அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகளை செய்யலாம். ஆலயம் செல்லக் கூடாது அங்கு செல்லக் கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் நாங்கள் வகுத்ததல்ல.
இவைகள் எதற்காக கூறப்பட்டது? என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் பால்ய வயதில் இழந்து விட்டால் அந்த குடும்பம் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும். வேதனைப்படும். அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் அவகாசம் வேண்டும். அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் இயல்பு வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இதுபோன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இது மனித ரீதியானது. ஆத்மா என்பது நீ கூறுவது போல் படிப்படியாக இத்தனை தினங்கள் அதனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது. இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும். அதாவது உடலை விட்டு பிரிந்த அடுத்த கணமே மறு பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு. மனித கணக்கிலேயே பல வருடங்கள் கழித்து பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே தேவர்களாக தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு. பாவங்கள் அதிகமாகவும் புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் கூறப்போனால் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு. இந்த நிகழ்வு தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள். இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை அல்வழிப்படுத்ததான் இறை வைத்துள்ள சடங்குகள்.