அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:
எம்மை நம்பி வந்து இந்த ஜீவ அருள் நாடியில் உரைப்பது சித்தர்கள்தான் என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர் கொண்டால் அவர்களுக்கு தெரியும். பிள்ளைகள் படிப்பு தாரத்தின் உடல்நிலை சொந்த இல்லம் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்து விட்டால் நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால் நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்.
அன்றாடம் அல்பொழுதிலே (இரவிலே) துயில் கொள்ளும் பொழுது யோசிக்க வேண்டும். இன்று நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தையால் ஆறுதல் சொன்னோம்? எத்தனை பேருக்கு உடலால் நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு நம் கைப் பொருள் கொண்டு உதவி செய்தோம்? எத்தனை ஆத்மாக்களை குளிர வைத்தோம்? இன்னும் எத்தனை பேருக்கு செய்ய வேண்டி இருக்கிறது? என்றெல்லாம் பட்டியலிட்டு பிறகு தம்மை தாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டுமே. உறவுக்கும் தாரத்திற்கும் பிள்ளைகளுக்கும் நெருங்கிய நட்புக்கும் செய்வது தர்மத்தில் வராதப்பா. அது கடமையில் வருமப்பா. இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கு செய்யும் தர்மம் இவனுக்கு செய்தால் நமக்கு பிரதிபலனாக என்ன செய்வான்? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதே தர்மம் ஆகும். எனவே அறத்தின் தன்மையை சூட்சுமத்தை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு துன்பம் இல்லை துயரம் இல்லை சிக்கல் இல்லை. மற்றவர்கள் இப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும் ஆன்மீகவாதிகள் எப்படி வேண்டுமானாலும் வழி காட்டட்டும்.
மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலி காலத்திலே கடுமையான தவம் கோட்பாடுகள் வனாந்திரத்திலேயே செய்யும் பூஜைகள் இவைகளை எல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலியுகத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறைவழி செல்ல வேண்டும். கர்மங்களை குறைக்க வேண்டும் என்றால் நியாயமான நேர்மையான நீதியான வழியிலே தர்மத்தை துவங்கி விட வேண்டும். காலநேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சரி தர்மம் செய்கிறேன் அதை வாங்கிக் கொண்டு ஒருவன் நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும் என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக் கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய்விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.