கேள்வி: வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு என்ன?
இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் காலகாலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப் பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும். சதாசர்வ காலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே. அந்த எதிர்பார்ப்பு தான் குறையாக மாறிவிடுகிறது. எனவே மனிதன் எதிர்பார்க்கின்ற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து இறையோடு சாயூச்சியமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.