கேள்வி: எல்லாவற்றையும் வெளிப்படையாக தாங்கள் ஏன் கூறுவதில்லை?
எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும்? எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படி கூறிக் கூறி அந்த விதியை ஏன் எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களை கூறிக் கொண்டிருக்கிறோம். நாடி வருகின்ற மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்படியாக பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்கும் சுபிட்சமாக இருக்கும்.
எம்மை நாடி வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துத்தான் நாங்கள் வாக்கை கூறுகிறோம். இதழில் ஓதுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக் கூடியதாக இல்லை என்று கூறுவது கூட ஒரு மனிதனின் தனி சுதந்திரம். இதுபோல் நிலையிலேயே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்தியம் பரிபூரண சரணாகதிதத்துவம் இவற்றை கடைபிடித்தால் கடுமையான விதியும் மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறைவழியில் அறவழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.