ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 63

கேள்வி: போகர் (பழனி முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை வடிவமைத்த சித்தர்) மற்றவர்களை விட தங்களின் தலைசிறந்த சீடர் ஆனதற்கு பின்னணி என்ன?

இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பொருள் கொண்டு விடப் போகிறார்களப்பா. போகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமோ எல்லோரையும் எம் சீடர்களாகவும் சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறோம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நோக்கி வரவிடுவதில்லை. ஆயினும் கூட போகரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால் எம் போன்ற பல மகான்களிடம் தான் எத்தனையோ கற்றாலும் கூட கல்லாதது போல் ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொண்டு அப்பொழுதும் ஒன்றும் தெரியவில்லை குருவே நீங்கள் சொன்னால் தான் எனக்கு புரியும் என எப்பொழுதுமே கூறிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு நிலையிலே அதோடு மட்டுமல்லாமல் நல்விதமாய் இந்த தெய்வ சக்திகளையும் சித்திகளையும் இவன் அடைந்தாலும்கூட மனித சக்தி போல ஒன்றும் அறியாதது போல் ஒவ்வொரு மூலிகையையும் தேடி சென்று சுயமாக பரிசோதனை செய்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டிருக்கிறான்.

72,000 நாடி நரம்புகளும் நன்றாக இயங்குவதற்குண்டான உடல் இயக்க முறைகளையும் சுவாச முறைகளையும் கற்றுணர்ந்ததோடு மலர் மருத்துவத்தையும் முதன்முதலாக மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். மலர் மருத்துவத்தோடு மட்டுமல்லாமல் நறுமண மருத்துவ முறையையும் இவன் அறிமுகப்படுத்தியிருக்கிறான். இன்னின்ன நறுமணத்தை இன்னின்ன பிணியாளர்கள் இன்னின்ன கிரக நிலையிலே நுகர்ந்தால் இன்னின்ன பிணிகள் போகும் என்பதெல்லாம் அவனுடைய சுய ஆய்வின் முடிவாகும். எங்கள் உதவியோ இறை உதவியோ இருந்தாலும்கூட அவற்றைப் பயன்படுத்தாமல் சுயமாகவே பலவற்றைக் கற்றுத் தேர்ந்து அனைத்தையும் கற்றுவிட்டு எந்தவிதமான தகுதியும் தனக்கில்லை என்பது போல் தான் எப்பொழுதுமே நடந்து கொள்வான். ஏதாவது சிறிய விஷயத்தைக் கேட்டால்கூட தெரியாது குருதேவா நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என்றுதான் எப்பொழுதுமே அவன் கூறிக்கொண்டிருப்பான். ஒருநாள் யாம் கேட்டோம் போகனிடம் பல சித்தர்கள் இருக்க

போகனே அன்னை துர்க்கையைத் தெரியுமா?

பதில்: தெரியாது

போகனே முக்கண்ணனைத் தெரியுமா?

பதில்: தெரியாது

போகனே இளையவன் பாலன் முருகனை தெரியுமா?

பதில்: தெரியாது

இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்று எல்லோரும் திகைக்கிறார்கள். பழனி முருகனை வடிவமைத்துவிட்டு எனக்கு முருகனைத் தெரியாது என்று கூறுகிறான்.
சரி ஏதாவது ஒரு மூலிகையைக் காட்டி இது குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா?

பதில்: தெரியாது

இப்படியே எல்லோரும் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வர இறுதியில் என்னதான் உனக்குத் தெரியும் என்று கேட்டால் குருவே உங்களைத்தான் தெரியும்.வேறு எதுவும் தெரியாது என்று கூறுகிறான். சொல்லப்பா இவன் (போகர் சித்தர்) தலை சிறந்த சீடனாகாமல் வேறு எவன் ஆவான்.

போகர் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.