கேள்வி: திருமணம் தாமதமாவதற்கு எது காரணம் விளக்குங்கள் ஐயனே
திருமணம் தாமதமானால் பாவமில்லையப்பா புண்ணியம்தான். இதை பலமுறை கூறியிருக்கிறோம். புரிந்துகொள் திருமணம் ஆன பிறகுதான் அது பாவமா? புண்ணியமா? என்று முடிவெடுக்க முடியும். இருந்தாலும் வேடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல் கவனமாக பார்த்தால் எது ஒரு மனிதனுக்கு ஏக்கத்தைத் தருகிறதோ எது ஒரு மனிதனுக்கு துக்கத்தைத் தருகிறதோ அந்த செயல்கள் அனைத்தும் பாவங்கள்தான். அதாவது ஒரு மனிதனுக்கு திருமணம் நடக்கவில்லை. அதனால் அவன் பாதிக்கப்படவில்லை என்றால் அது அவனுக்கு பாவமில்லை. ஆனால் அது பாவத்தை தூண்டுவதாக இருக்கக்கூடிய செயல் என்றால் கட்டாயம் அது அவனுக்கு துன்பத்தைத் தரும். துன்பத்தை தராத எந்த நிகழ்வையும் பாவம் என்று எடுத்து கொள்ள இயலாது.
கேள்வி: எங்கள் பாவ வினைகளை நீக்குவது ஒரு குருவின் கடமையல்லவா? நாங்கள் வாழ்ந்துதான் அந்த கர்மவினைகளை கழிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி நீங்களே அவைகளை அகற்ற ஏதாவது உபாயம் செய்ய முடியுமா?
குரு வழிகாட்டுவார் ஆனால் ஊட்டமாட்டார் என்பதை எப்பொழுதும் புரிந்துகொள். நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால் குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால் எப்படியப்பா பாவ வினை தீரும்? எனவே நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தொடர்ந்து எம் வழியிலே வந்தால் கட்டாயம் ஞானக்கதவு திறக்குமப்பா.