கேள்வி: மனதை மகிழ்ச்சியோடும் நன்மையை மட்டும் சிந்திக்கும்படி வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் என்ன?
இறைவன் அருளாலே மனதிற்கு பயிற்சி என்றாலே முதலில் எண்ணங்களை கவனிப்பதும் எண்ணங்களை ஒழுங்கு செய்வதும் ஆகும். இதோடு மட்டும் அல்லாமல் யாங்கள் அடிக்கடி கூறுவது போல மனிதன் பார்வையிலே மனித சிந்தனையிலே யாருக்கு எவையெல்லாம் துன்பமாக தோன்றுகிறதோ துயரமாக தோன்றுகிறதோ அதுபோல் துன்பங்களும் துயரங்களும் வரும் பொழுதெல்லாம் மனம் விரக்தி அடையாமலும் மனம் தளர்ந்து போகாமலும் இறை நம்பிக்கையை விட்டுவிட்டு போகலாம் என்கிற எண்ணம் வராமலும் இருக்கும் வண்ணம் மனதை நன்றாக வைரம் போல் வைடூரியம் போல் வைராக்கியம் கொண்டு வைத்திருக்க மனிதன் முயற்சியும் பயிற்சியும் எடுத்தல் அவசியம். இது கிட்ட இறைவன் அருள் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது அவசியம். துன்பத்திலும் துயரத்திலும் தளர்ந்து போகாமல் விரக்தி அடையாமலும் துன்பம் அதிகமாக வந்து விட்டால் உலகியல் கடமைகளை செய்ய மாட்டேன் நன்மை தரும் செயலை செய்ய மாட்டேன் என்று எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும் இறைவா அதற்குரிய தன்மையை கொடு இறைவா என்று வேண்டிக் கொள்ளுதலே மனதிற்கு உண்டான தலை சிறந்த பயிற்சியாகும்.