அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
ஒரு மனிதனானவன் தனக்கும் தன குடும்பத்திற்க்கும் செலவு செய்வது இயல்பு. தர்ம சிந்தனை என்பது பூர்விக புண்யம் இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு வரும். அந்த தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால் ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும் எத்தனை அபிஷேகம் யாகங்கள் செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளை பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளை பெற வேண்டுமென்றால் பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. தர்ம குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருந்து விட்டால் போதும். இவன் இறையை தேட வேண்டியதில்லை. இறை இவனை தேடி வந்து விடும். எனவே எவனுக்கு இறை அருள் இருககிறதோ அவனுக்குத்தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். பிறர் படுகின்ற கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எண்ணம் வ௫ம். அது மட்டும் அல்லாது எவன் ஒருவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ அவனிடம் இறையே கை ஏந்தும் என்பதற்கு கர்ணனே ஒ௫ சாட்சி. எனவே பிள்ளைகளுக்கு ஈன்றோர சொல்லி கொடுக்க வேண்டியது. இன்னும் சொல்ல போனால், சொல்லி கொடுக்க வேண்டியதே இல்லை. ஈன்றோர் பிள்ளைகளின் முன்னால் தானத்தை அள்ளி கொடுத்துக் கொண்டே போனால் அதை பார்க்கின்ற பிள்ளைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மன நிலைக்கு வந்து விடும். ஒரு பிள்ளைக்கு நீ டாக்டர் ஆகு விஞ்ஞானி ஆகு என்று தான் சொல்லி கொடுக்கிறார்களே ஒழிய நீ பிறருக்கு உதவு என்று யாரும் சொல்லி கொடுப்பதில்லை. ஏன் என்றால் ஒருவன் உலகியல் ரீதியாக வெற்றி பெறுவதும் வெற்றி பெறாமல் போவதும் அவன் விதியாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தொழிலை செய்து அவன் தன ஜீவனை நடத்தி கொள்ளலாம். ஆனால் தர்ம குணம் மட்டும் ஒருவனுக்கு எத்தனை புத்தகம் படித்தாலும் வந்து விடாது .பிறர் என்ன உபதேசம் செய்தாலும் வந்து விடாது. அது அவன் பிறப்பிலேயே வர வேண்டும். அதற்கு தாய் தந்தை புண்யம் செய்திருக்க வேண்டும். தாய் தந்தையின் முன்னோர்கள் புண்யம் செய்திருக்க வேண்டும்.