அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றென்றும் நலமே விளையும் என்பதனை யாம் இறைவனின் கருணையினாலே எப்பொழுதும் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இதுபோல் மனிதர்களோ அறியாமையால் மாயையில் சிக்குண்டு எப்பொழுதுமே பாவங்கள் செய்தே வாழ வேண்டிய நிலையில் இருப்பதனால் பாவங்கள் குறித்து எச்சரிக்கை செய்வதும் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களில் பலவற்றை நுகர்ந்தும் சிலவற்றை பக்தியினாலும் பரிகாரங்களினாலும் தீர்த்துக் கொள்வதோ குறைத்துக் கொள்வதோ மாற்றிக் கொள்வதோ இதுபோல் முந்தைய பாவங்கள் எது என்று தெரியா விட்டாலும் விளைந்து வரும் துன்பங்களினால் இது பாவங்களின் எதிரொலி என்று மனிதன் சரியாக புரிந்து கொண்டு நிகழ் பிறப்பிலே விழிப்புணர்வோடு வாழ்ந்து பாவங்களை செய்யாமல் இருக்க கடும் பிரயத்தனம் செய்துதான் ஆக வேண்டும். ஒருபுறம் ஆலயம் சென்று இறைவனை வணங்குவதோடு மறுபுறம் வாழ்வியலில் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் சில தவறுகளை செய்துதான் ஆக வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு மனிதர்கள் தவறு மேல் தவறு செய்வதால்தான் பிராயச்சித்தங்கள் கூட பலனளிக்காமல் போய் விடுகிறது. ஒரு பாவத்தை செய்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்து விட்டால் அதனை விட அதனை செய்யாமல் எத்தனை இடர் வந்தாலும் மனிதன் தாங்கிக் கொள்ளலாம். இதற்கு வேண்டியது வைராக்யம். பலகீனமான மனது உடையவர்கள்தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறுகள் செய்து விடுகிறார்கள்,
நாங்கள் ஏன் ஜீவ அருள் ஓலையிலே பெரும்பாலும் மௌனத்தைக் கடைபிடிக்கிறோம்? எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் எம்முன்னே அமர்கின்ற மனிதனின் விதி இடம் தர வேண்டும். வாக்கைக் கூற இறைவன் அனுமதி தரவேண்டும். இதுபோல் சுவடியை ஓதுகின்றவன் நிகழ் பிறப்பிலே எத்தனை உலகியல் துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடம் சுவடிக்கென்று செய்ய வேண்டிய கடமைகளை நாள் தவறாது ஆற்ற வேண்டும். எல்லாவற்றையும் விட வருகின்ற மனிதனுக்கு அவன் விதி இடம் தர வேண்டும் அல்லது மனித ரீதியாக கூற வேண்டுமென்றால் இந்த சுவடி மீது நம்பிக்கையும் ஈடுபாடும் ஈர்ப்பும் இயல்பாகவே இருக்க வேண்டும். எண்ணியது நடந்தால் நம்புவேன் என்பதும் நான் எண்ணியது போல் எதுவும் நடக்கவில்லை என்றால் நம்பமாட்டேன் என்பதும் ஒரு குழந்தைத்தனமான முடிவாகும். எம்மை அணுகினால் தர்மம் செய் ஆலயம் செல் பிரார்த்தனை செய் என்றுதான் எப்பொழுதுமே கூறுவோம். அதைவிட்டு உலகியல் ரீதியாக வெற்றிக்கு வழிகாட்டுவதோ அல்லது உலகியல் ரீதியாக சொத்துக்களை சேர்க்க வழிகாட்டுவதோ அல்லது தனத்தை எவ்வாறெல்லாம் பெருக்குவது என்று வழிகாட்டுவதோ எமது பணியல்ல.
இது பக்குவமில்லாத மனிதர்களுக்கு கயப்பாக (கசப்பாக) இருக்கும். அதனால்தான் பெரும்பாலான மனிதர்களை விதியே அழைத்து சென்றுவிடும். விதி வழி வாழ்வதே மனிதனுக்கு எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தான் நேர்மையாக ஈட்டிய பொருளால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் செய்து கொள்ளும் செலவு அனைத்துமே புண்ணியத்தின் கழிவாகும். பொது நலத்திற்காக செலவு செய்யும் அனைத்துமே அது காலமாக இருந்தாலும் தன் உழைப்பாக இருந்தாலும் தன் அறிவாக இருந்தாலும் அறிவால் பெறப்பட்ட செல்வமாக இருந்தாலும் அனைத்தும் புண்ணிய வரவாக இருக்கும்.