அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
எப்பொழுதுமே புராண கதைகளை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. சூரிய பகவான் ஆத்மகாரகன் என்று ஜாதகத்திலே கூறப்படுகின்ற ஒரு கிரகம் அதே சமயம் ஆத்மம் எனப்படும் ஞானத்தையும் தெய்வீக விஷயத்தையும் கூட அது மறைமுகமாக குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்திலே மனம் ஓரிடத்தில் அடங்கினால்தான் எதையும் கற்க இயலும். அதே சமயம் மெய்ஞானம் ஆன்மீகம் போன்ற விஷயங்கள் எல்லாம் உலகியல் விஷயங்கள் போல உடனடியான நன்மைகளையும் சுகத்தையும் மனிதனுக்கு வெளிப்படையாக புரிவதுபோல் தராததால் அதை ஆர்வம் கொண்டு கற்க ஒரு மனிதன் முயன்றாலும் அவன் மனம் ஓரிடத்தில் அடங்காததால் அங்கும் இங்கும் அலையும். அல்லது அந்த ஆன்மீக விஷயங்கள் அவனை அலைக் கழிக்கும். அந்த அலைக் கழிக்கின்ற விஷயங்களுக்கு இடையே அலைகள் மேலே ஏறி கீழே விழுந்து என்னதான் நாவாயை தூக்கிவிட்டாலும் அந்த நாவாயானது திடமாக ஆழியில் செல்வதுபோல ஒரு ஆத்மஞான தத்துவத்தையும் மெய்யான வேதங்களையும் கற்க வேண்டுமென்றால் பல்வேறு விதமான நிலைக்கு தன்னை ஒரு மனிதன் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழியில் சிந்தித்துப் பார்த்தால் குருவானவர் எதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் அந்த விஷயம் பின்னர். ஆனால் கற்றுக் கொள்வதற்கு உண்டான தளத்தை அவர் முதலில் எதிர்பார்ப்பார்.
முற்காலத்தில் குருவானவர் வேதங்கள் கற்க வருகின்ற மாணாக்கனிடம் விதவிதமான சோதனைகளையெல்லாம் தந்து அவற்றில் அவன் தேர்ந்த பிறகுதான் வேதம் கற்றுக் கொள்ளவோ அல்லது அவன் எந்த வித்தைக்காக வந்தானோ அந்த வித்தையை போதிக்க அனுமதிப்பார். அப்படியொரு சோதனைதான் ஒரு மாணாக்கனை அலைக்கழித்தல் என்பது. அப்படி அலைந்து திரிந்து சோர்ந்து போகாமல் எந்த நிலையிலும் விடாப்பிடியாக நான் வேதங்களை வேத சூத்திரங்களை அந்த நுட்பமான விஷயங்களை கற்றுக் கொண்டே தீருவேன் என்றால் நீ இங்கு வா நீ அங்கு வா நீ இந்த சூழலில் இன்று வராதே. நீ நாளை வா என்று கூறும்பொழுது அந்த அலைக்கழித்தலிலே மனம் சோர்ந்து போகாமல் மேலும் மேலும் ஆர்வம் அதிகரிக்கிறதா? என்று பார்த்து கற்றுக் கொடுப்பார். அப்படியொரு சோதனைதான் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். என் பின்னால் என் வேகத்திற்கு ஈடுகொடுத்து நீ வருவாயா? என்று ஒரு பொருள். அதற்காக இந்த சூரியன் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த சூரியன் பின்னால் வா என்று நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. அப்படிப் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்தில்தானே இருக்கிறது. பூமிதானே சுற்றுகிறது என்று மனித விஞ்ஞானம் கூறுகிறது. எனவே இதை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் ஏற்புடையது அல்ல.