கேள்வி: சிறுநீரகங்களை இழக்காமல் அவற்றை செயல்பட செய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா?
அப்படியொரு மாற்று சிகிச்சை பெறவேண்டும் என்ற விதி இருக்கும் பொழுது அவன் எத்தனை பிராத்தனை செய்தாலும் அந்த சிகிச்சையிலிருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் கூட ஆதி நிலையிலே இருப்பவர்கள் முறையான தெய்வ வழிபாட்டையும் தர்மத்தையும் செய்வதோடு சந்திரனுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று முடிந்த வழிபாடுகள் செய்வது கூடுமானவரை மாற்று சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இது போன்ற குறைகள் வருவதற்கு எத்தனையோ பாவங்கள் காரணமாக இருந்தாலும் முறையற்ற இடத்தையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்பு செய்து அசுத்தப்படுத்துவதால்தான் இது போன்ற நோய்கள் மனிதனைப் பற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தை அதற்கென்று ஒதுக்கிவிட்டால் அந்த இடத்தை அதற்கென்றுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யாமலும் மிக அநாகரீகமாக நடந்து கொள்வதும் குறிப்பாக புனித தீர்த்தம் ஆலயம் புண்ணிய நதிகளையெல்லாம் அசுத்தப்படுத்துகிறான். எல்லா வகையான தொழிற்சாலை கழிவுகளையும் புண்ணிய நதியில் கலக்கிறான். இப்படி பூமியை அசுத்தப்படுத்த அசுத்தப்படுத்த மனிதர்களின் உடலில் அசுத்தங்களை சுத்தப்படுத்தும் உறுப்புகள் செயலிழக்கத் துவங்கும். இதையும் சரி செய்து கொண்டால் மனிதனுக்கு இதுபோன்ற பிணிகள் வராமல் இருக்கும்.