கேள்வி: கிரிவலம் செல்லும் போது செருப்பை அணிந்து கிரிவலம் செல்லலாமா? அன்றாடம் வீட்டில் காலையில் பூஜை செய்யும் போது வாயை மட்டும் கொப்பளித்து விட்டுத்தான் பூஜையில் அமரவேண்டுமா?
இறைவன் அருளால் மலை வலமாக இருக்கட்டும் ஆலயத்தின் ராஜகோபுரம் அல்லது ஆலயத்தின் எல்லையாக இருக்கட்டும் கூறப்போனால் இன்னும் பல இடங்களில் ஆலய கோபுரத்தை சுற்றியும் பாதரட்சைகளை (செருப்பு) மனிதர்கள் விடுகிறார்கள். இது மகாபெரிய தோஷத்தை ஏற்படுத்துவதாகும். இன்னும் கூறப்போனால் ஆலயம் செல்வதற்கு முன்பாகவே உடல் தூய்மை செய்துவிட்டு நீராடிவிட்டு மாற்று உடை அணிந்து செல்வதே மிகவும் சிறப்பு. ஆண்கள் மேலாடை இல்லாமல் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. கட்டாயம் கிரிவலம் போன்ற இறைவழிபாட்டிலே பாதரட்சை (செருப்பு) அணியாமல் செல்வதே சிறப்பாகும்.
பாதரட்சை அணியாமல் செல்ல முடியவில்லை அதனால் சில துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அதை சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செல்லாமல் இருப்பதே சிறப்பு. அடுத்ததாக உடல் சுத்தி என்பது மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினால் நன்மை உண்டு. தவிர்க்க முடியாத சூழலிலே இன்னவள் கூறியது போல் மேலெழுந்தவாரியாக சுத்தம் செய்து கொண்டு தாராளமாக இறைவனை வணங்கலாம். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யாமல் இறை வழிபாடு செய்வதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
கேள்வி: ஜாதகத்தில் ராகு கேது போல் மாந்தி என்ற ஒன்று உள்ளதா?
மாந்தி இருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து இன்னும் பல கிரகங்கள் சேர்க்கப் போகிறார்கள். ஆனால் எத்தனை சேர்த்தாலும் அது ஒன்பதின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். சனியின் பலன்கள் அத்தனையும் மாந்திக்கும் பொருந்தும் என்பதால் மாந்தியை சேர்த்து பார்த்தாலும் தவறில்லை. அதை சேர்க்காவிட்டாலும் தவறில்லை.