கேள்வி: இளந்தளிரை மொட்டைப் பறித்தால் பல இளம் சிசுக்களைக் கொல்வதற்கு சமம் என்று ஒரு முறை கூறியிருந்தீர்கள். பூஜைக்கு பூக்கள் தேவைப்படுகிறது. அப்படி பூஜைக்கு பறிப்பதென்றால் மலர்கள் மலர்ந்த பிறகுதான் பறிக்க வேண்டுமா?
இறைவன் அருளைக் கொண்டு ஒரு மனிதனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவன் கத்தியால் ஒரு நோயாளியின் வயிற்றை காயப்படுத்தி மருத்துவம் செய்கிறான். ஒரு கள்வனின் கையில் இருக்கும் கத்தியும் அதையே செய்கிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவனின் கத்தி பிணியை நீக்குவதற்காக அந்த செயலை செய்கிறது. அதனால் துன்பம் ஏற்பட்டாலும் பிணியாளி பொறுத்துக் கொள்கிறான். ஏன் என்றால் நோய் என்னும் கடுமையான துன்பத்திலிருந்து நிவாரணம் அடைவதற்கு இந்த சிறிய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கள்வனின் கையில் உள்ள கத்தி பொருளைப் பறித்து பிற மனிதர்களுக்கு இடையூறு செய்வதற்காகவே இருக்கிறது. எனவே பூக்களைப் பறித்தாலும் தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு ஏற்ற நோக்கத்திலே மெய்யாக மெய்யாக மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும் பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும் இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும் பூக்களின் சாபத்தையும் விருக்ஷங்களின் (மரங்கள் )சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும் தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒரு மகான் உண்மயைாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான் நல்ல சேவைகளை செய்திருக்கிறான் பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு (அகத்திய மாமுனிவர்) உடன்பாடு இல்லை.