கேள்வி: பல உன்னதமான ஆத்மாக்கள் விண்மீன்களாக மாறும் என்று கூறியிருந்தீர்கள். அவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?
சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்கப் பூர்வமான கதிர்களை பூமிக்கும் மற்ற லோகங்களுக்கும் (உலகங்களுக்கும்) அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வர வேண்டும் என்று துடிக்கிறதோ அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
கேள்வி : திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?
அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று ஒட்டு மொத்த மனிதனின் அரைப்பகுதி பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும் வெள்ளியிலும் பஞ்சு நூலிலும் கயிறுக் கட்டிக் கொள்வதும் குறிப்பாக காளையினத்தவர் (ஆண்கள்) கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் (கடையில்) விற்கிறது வாங்கிக் கட்டிக் கொள்வது போல அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணுலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ இதையும் இப்படிதான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையான ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏதோ அங்காடியில்(கடை) வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து குறைந்தபட்சம் ஒரு சப்த (07 நாட்கள்) தினங்களாவது பூஜை செய்து மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு ஒரு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. இது போன்ற பல்வேறு விதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும் பிராத்தனையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.