ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 97

கேள்வி: அரச மரம் பற்றி

பல அரசர்களே மரம் போல் இருக்கிறார்களப்பா. இறைவனின் அருளாலே அரச மரத்திலே பலவிதமான ஆற்றல்கள் போதிந்திருப்பதை மனிதர்கள் மெல்ல மெல்லதான் புரிந்து கொள்கிறார்கள். மனித சிந்தனையிலே பெரும்பங்கு வகிப்பது மனிதன் கூறுவது போல மூளையாகும். அந்த மூளை நன்றாக வேலை செய்வதற்கு அயர்வுராமல்(சோர்வுராமல்) இருப்பதற்கு வேண்டிய வேதிப்பொருள்களை எல்லாம் தூண்டிவிடக்கூடிய நிலை அந்த அரச மரத்தை சுற்றியுள்ள காற்றிலே இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலே அடிக்கடி அரச மரத்தடியிலே உள்ள விநாயகப் பெருமானையும் நாக தெய்வங்களையும் வணங்கி பலமுறை சுற்றி வந்தால் சில நாழிகை அங்கு அமர்ந்தால் கட்டாயம் அங்குள்ள விநாயகர் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அந்த அரச மரத்தின் மூலிகைத் தன்மை கட்டாயம் தேகத்தைக் காப்பாற்றும். எனவே இது போன்ற ஒவ்வொரு விருக்ஷத்திடமிருந்தும் அற்புதமான மூலிகைப் பயன்கள் காற்றின் மூலம் மனித சுவாசத்தின் மூலம் உள்ளே செல்கிறது. இதனை மனிதன் நன்றாக புரிந்து கொண்டு அந்த இடத்திலே இருக்கும் பொழுது இறை சிந்தனையோடும் வேறு தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் இருந்து அமைதியாக வாய் வழியாக இல்லாமல் ஆழ்ந்த பெருமூச்சை நாசியின் வழியாக விட்டு இழுத்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.

ஒவ்வொரு மரத்தினாலும் நல்ல பலன் உண்டு. சில மரங்கள் தீய பலனைத் தருவதாக மனிதன் எண்ணலாம். அதை நேரடியாக தீய பலன் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது யாருக்கு உகந்ததோ அவர்கள் அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கூறுங்கால் புளிய விருக்ஷம் எனப்படுவது அதிக அனல் உஷ்ணம் அங்கு தங்குவது கூடாது என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதிக அளவு குளிர் தேகம் கொண்டவர்கள் சீதளக் குற்றம் உள்ளவர்கள் அங்கு தாராளமாக தங்கலாம்.

கேள்வி: அம்மையப்பன் தான் உலகம் என்பதன் பொருள்

இறைவனையும் இறைவியையும் தாய் தந்தையாக பாவிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களை இறைவனுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.