ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 54

கேள்வி: உயிர்பலி குறித்து

மிக மிக கொடிய பாவம். இந்த பாவத்திற்கு பிராய்ச்சித்தம் என்பதே கிடையாது. அறியாமை மக்கள் செய்யலாம். அறிந்த பிறகு இதனை விட்டுவிட வேண்டும். ஒரு மனிதன் தன்னை விட தாழ்ந்த உயிரை இவ்வாறு துன்பப்படுத்துவதை இறைவன் ஒரு பொழுதும் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை செல்வத்திலும் பதவியிலும் சக்தி வாய்ந்த மனிதனைப் பார்த்து இன்னொரு மனிதன் நீ ஒரு 100 குழந்தைகளை பலியிட்டால் பதவி நிலைக்கும் என்று கூறுவதாகக் கொள்வோம். தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஊரிலே உள்ள 100 குழந்தைகளை கடத்தி சென்று அவன் பலி கொடுத்தால் அதை இந்த சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? ஒத்துக் கொள்ளாது அல்லவா? தங்கள் குழந்தைகளை இழக்க எந்த பெற்றொரும் விரும்பாதது போல இறைவனும் தான் படைத்த உயிர்களை தான் படைத்த இன்னொரு உயிர் துன்புறுத்துவதை ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள மாட்டார். இறைவனின் கடுமையான சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். அறியாமையால் கால காலம் இந்த தவறை மனிதர்கள் செய்கிறார்கள்.

கேள்வி: ஐயா நீங்கள் உயரம் குறைவு என எல்லோரும் கூறுகிறார்களே?

நான் ஆறடி உயரமப்பா அது அந்த நடிகனால் வந்த வினையப்பா

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 53

அகத்திய மாமுனிவர்(குருநாதர்) கூறும் சூட்சுமம்

ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு பிறருக்கு சேவையும் பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்சுமம். நாங்கள் கூறுகின்ற இந்த சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை.

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க வழி சொல்லுங்கள்?

இறைவன் அருளால் இன்னும் ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் (முட்டாள்கள்) வரக்கூடிய துன்பங்கள்தான் இந்த உலகிலே அதிகம். தன் முனைப்பு ஆணவம் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் (இராஜ்ஜியம்) என்றுமே அறியா சனங்களால் (அறியாமையில் உள்ள மக்கள்) தீர்மானிக்கப் படுவதால் இந்த அறியாசனங்கள் அரியாசனங்களை சரியாக வைத்துக் கொள்ள தெரிவதில்லை. அறியாசனங்களின் இந்த அறியாசனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படிதான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறுவிதமாகக் கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒருவன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான் யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரெங்கும் அவனைப் பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதை செய்யும் பொழுது கண்டு கொள்ளாத சமுதாயம்\, தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால்தான் நாட்டில் சுபீட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 52

கேள்வி: ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் சுலபமாகத் தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?

பரிபூரண சரணாகதியோடு இறைவனை வணங்குவது. கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது. நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுமாறு செய்வது. அன்றாடம் எதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தொண்டை செய்வது இது போதுமப்பா.

கேள்வி: ஸ்டான்லி மருத்துவமனையில் (சென்னை) ஜீவசமாதி கொண்டுள்ள இஸ்லாமிய மகானைப் பற்றி

இறைவனின் அருளால் மருத்துவமனையிலே அடங்கியுள்ள பிறை வர்க்க (இஸ்லாம்) மாந்தனைக் குறித்துக் கேட்டாய். வர்க்கம் தாண்டி இறையை நோக்கி தவம் செய்தவர்களில் அவனும் ஒருவன். சித்த பிரமை பிடித்தவர்களும் மனநிலையில் குழப்பம் உள்ளவர்களும் மனோரீதியாக முடிவெடுக்க முடியாதவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை தோறும் அங்கு சென்று பிராத்தனை செய்யலாம். நல்ல பலன் உண்டு. பிராத்தனை செய்கின்ற ஆத்மாக்களின் தன்மைகேற்ப அன்னவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டு அவர்களின் குறைகளைத் தீர்ப்பான் என்பது இன்றளவும் திண்ணம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 51

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு

இறையின் அனுக்ரகம் மழை என்று வைத்துக் கொள்வோம். அதை ஒவ்வொரு மனித பாத்திரமும் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறையின் அருள் பிரசாதத்தை ஏன் பல்வேறு மனிதர்களும் உணர்வதில்லை? ஏனென்றால் மழை நீரை ஏந்தும் பாத்திரமானது தூய்மையானதாகவும் சாளரங்கள் (ஓட்டைகள்) இல்லாமலும் இருக்க வேண்டும். திறந்த மனம் இல்லாமலும் பெருந்தன்மை இல்லாமலும் சுயநலமும் புலனாசையும் இச்சையும் நிரம்பிய மனிதனால் இறையருளைப் பெற இயலாது. இறையருளைப் பெறுவதற்கு ஏற்ப மனிதன் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும் பயிற்சியும் வேண்டும். தோற்று தோற்றுத்தான் ஆன்மீகத்தில் மேலேற வேண்டும். இது கலிகாலத்தில் எப்படி சாத்தியம்? சித்தர்களுக்கு என்ன? குடும்ப வாழ்க்கை ஏதும் இல்லை ஆசா பாசங்கள் இல்லை மனிதர்களால் அவ்வாறு ஏகந்தமாய் இருக்க முடியுமா? (என்று கூட கேட்கலாம்). ஆனால் ஆத்ம பலம் பெருகிவிட்டால் மனித வாழ்வின் சிக்கல்கள் எல்லாம் சிக்கலே அல்ல. மனிதன் புலன் ஆசைகளை விட்டு வெளியே வந்து தன்னை மூன்றாவது மனிதன் போல் பார்த்து தேகத்தையும் ஆத்மாவையும் தனித்தனியாகப் பார்க்க பழகி தியானம் யோகம் ஸ்தல யாத்திரை யாகம் அபிஷேகங்கள் அறங்கள் போன்றவற்றை அவன் செய்ய செய்ய அவனுக்குள் உள்ள ஆத்ம பலம் பெருகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 50

கேள்வி: தீபம் ஏற்றுவதின் பலன்

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும் பாவமும் ஆகும். ஔி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி மாந்தனின் (மனிதனின்) மனதிலே உள்ள இருள் அகற்றி சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஔி வளரட்டும் ஔி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும். இருந்தாலும் கூட உயர் தரமான நெய்யினை கொண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பொழுது அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும் ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு வெறும் எந்திரம் போல் தீபம் ஏற்றாமல் ஆத்மார்த்தமான பிராத்தனை செய்து கொண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற ஏற்றுபவனுக்கு ஏற்றப்படும் இடத்தில் அதிலே சுற்றி இருந்து பங்கு பெறும் மனிதனுக்கு பாவ வினைகள் படிப்படியாக குறைந்து நல் வினைகள் கூடி அவன் எதிர்பார்க்கக்கூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.

கோவில்களில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனின் அன்றாட கலிகால வாழ்க்கையில் நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும் சூழலும் இட வசதியும் இருந்தால் எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம் அதில் பலன் உண்டு. இறையருளும் உண்டு. ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும் போது பஞ்சாட்சரம் ஓதித்தான் அதை கையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: ஐயா என்னை சுற்றி உள்ள எல்லோரும் நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தார் எல்லோரும் இப்படி பணத்தை இறைத்துக் கொண்டு கோவிலை சுற்றிக் கொண்டு இருக்கிறாயே என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்கிறாயே என்று கேலி செய்கிறார்களே ஐயா?

மிகவும் நல்ல விஷயமப்பா உன் கடனை தானே முன்வந்து அவன் அடைக்க ஒப்புக் கொண்டு உனக்கு உண்மையில் உதவுகிறானப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 49

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு

இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம் இறை வணங்கி அறம் தொடர எந்நாளிலும் நலமே. இடைவிடாத பிராத்தனைகள் மெய் தளராமல் மெய் உரைத்தல் என்றென்றும் மேன்மையாம். ஒரு மனிதனின் உடலை தாய் தந்தை உருவாக்கலாம். அது வெறும் மாமிசம் பிண்டங்கள்தாம். அதற்கு உள்ளே உயிர் அல்லது ஆத்மாவை எந்த கால கட்டத்தில் எந்த கிரக நிலை இருக்கும் போது நுழைக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். அந்த ஆத்மாவின் பாவ புண்ய கணிதத்தை ஆராய்ந்து அது மறு பிறப்பில் எப்பேற்ப்பட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டும் எப்படிப்பட்ட தாய் தந்தை அரவணைப்பில் வாழ வேண்டும்? அல்லது பிறந்தவுடன் தாயை இழக்க வேண்டும் அல்லது தந்தையை இழக்க வேண்டும் அல்லது இருவரும் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது இருவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் இறுதிவரை தாய் தந்தையரால் கல்வி கொடுக்கப் பட வேண்டும் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகளை காண வேண்டும் இந்த வயதிலே இன்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் விபத்தை பொருளாதார நஷ்டம் காதல் தோல்வி அடைய வேண்டும் பெண்ணால் மோசம் அடைய வேண்டும் பெண்ணால் மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு கதையை எழுதித்தான் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவையும் பூமிக்கு அனுப்புகிறான். சரி இதில் மனிதனின் பங்கு எங்கே?

எல்லாம் விதிதான் என்று ஒரு மனிதன் ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து விட்டால் போதுமா? பிறகு எதற்கு ஆலயங்கள் வழிபாடுகள்? என்று கேட்க தோன்றும் ஆம் எல்லாம் விதிதான். விதியை மழை என்று எடுத்துக் கொள். மழையை தடுக்க உன்னால் முடியாது. ஆனால் மழையில் இருந்து உன்னை காத்துக் கொள்ள ஒரு குடையை எடுத்து செல்லலாம் அல்லவா? அந்த குடை தான் நாங்கள் காட்டும் வழிபாடுகள் வழிமுறைகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 48

கேள்வி: மந்திரம் சொல்லும் போது

நா வறட்சி ஏற்படாமல் இருக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வதும் கனி வகைகள் ஆவியிலே வெந்த உணவு பொருட்கள் கீரை வகைகள் உட்கொள்வதும் உடல் சோர்வை அகற்றும். அதோடு சமைத்த உணவை விட கனி வகைகள் நல்ல பலனை தரும். மந்திரங்களை எந்த மொழியில் சொன்னாலும் ஒரே வகையான பலனைத்தான் தரும். ஆனால் அதை விட எந்த மனநிலையில் மந்திரங்களை ஜெபிக்கிறாய் என்பதுதான் முக்கியம். அதிகம் அதிகம் மந்திரங்களை நாங்கள் உரு ஏற்றச் சொல்லும் காரணமே அந்த நீண்ட கால அவகாசத்திலே இடையிலே ஒரு சில கண் இமைக்கும் நேரத்திலாவது மனிதன் மனம் ஒன்றி அதை சொல்ல மாட்டானா? என்பதற்காகத்தான் ஒரு லட்சம் மந்திரத்தைக் கூறு என்றால் ஒரு லட்சம் தரம் அவன் மனம் ஒன்றியா கூறப் போகிறான்? அதனால்தான் இப்படி கூறுகிறோம். சமஸ்கிருத மொழியில் சொல்ல முடியவில்லை என்றால் தமிழிலேயே

ஓம் சுக்ரன் திருவடிகள் போற்றி
ஓம் குபேரன் திருவடிகள் போற்றி
ஓம் அன்னை மகாலட்சுமி திருவடிகள் போற்றி
ஓம் ஐஸ்வர்யா ஈஸ்வரர் திருவடிகள் போற்றி என்றும் கூறலாம். தவறு ஏதுமில்லை.

கேள்வி: ஸ்தல விருட்சத்தின் பழம் சாப்பிட்டால் தோஷமா?

ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் இலைகளையோ வேர்களையோ காய் கனிகளையோ முறையற்று பயன்படுத்தினால் தோஷம் வரும் என்பது உண்மைதான். இது ஒரு புறம் இருக்கட்டும் அது எப்படியப்பா அம்மனுக்கு போட்ட நகையை களவாடும் போது வராத தோஷம் கனிகளை எடுக்கும் போது வந்து விடுமா?

கேள்வி: எருமை மாட்டிற்கு மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரை கொடுப்பதால் உயிர் பிரியும் தருணம் துன்பமாக இருக்காது என்று சொல்லப்படுவது பற்றி

இது போல் வாங்கிக் கொடுப்பது சிறப்பு. இதை மட்டும் செய்தால் பாவம் தீர்ந்து விடாது. என்ன செய்யும் வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாவம் செய்வது எளிது. ஆனால் ஒரு பாவத்தை கழிப்பது என்பது மிக மிகக் கடினம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 47

கேள்வி: சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட அதை ஏழைகளுக்கு கொடுப்பதைப் பற்றி?

ஒருவனின் மனம் புத்தி அறிவு ஞானம் இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு இதை பொறுத்துத்தான் இந்த வாதத்தை எடுத்துக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதரிடம் நீ தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று நாங்கள் கூறினாலும் அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால் பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி என்றால் அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பொருள்கள் வாங்குகிறான் அந்த வியாபாரம் செழித்து வளரட்டும். அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேருகிறது அல்லவா? அந்த அடிப்படையிலும் இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும் அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்க வேண்டும். அப்படியாவது சிறிது கர்மா இவனுக்குக் குறையட்டும் என்றுதான் கூறுகிறோம்.

அதே சமயம் ஒரு உயர்ந்த பொருளை ஏன் ஒரு கல்லின் மீது ஊற்ற வேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா? என்று ஒரு வாதத்தை வைக்கும் பொழுது ஒருவனுக்குப் பிரியமான தந்தை தாய் மனைவி மக்கள் போன்றோர்களின் பிம்பங்களை களங்கப்படுத்து அதன் மீது எச்சில் உமிழ் என்றால் உமிழ்வானா?. எனவே அந்த பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது சிலை என்று கருதக்கூடிய மனிதனுக்கு அது வெறும் சிலை. ஆனால் அது உள்ளே தெய்வம்தான் என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் அதன் மூலம் மன அமைதியும் வரும். எடுத்த எடுப்பிலேயே நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு கொடு என்று சொன்னால் அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா காலப்போக்கில் திருந்துவான் என்றால் அவனை அவன் போக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவோம். எனவே இதில் யார் செய்வதும் குற்றமல்ல பாதிப்பும் அல்ல இரண்டு வழிகளுமே சிறப்புதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 46

கேள்வி: ராம நாமத்தை பற்றி

சதா உள்ள சுத்தியோடு ராம நாமத்தை ஜபித்து வந்தால் மனிதனை இறைவனிடம் சேராமல் தடுப்பதற்கு இந்த உலகிலே எத்தனையோ சோதனைகள் துன்பங்கள் காத்திருக்கின்றன. ஒன்று மண் ஒன்று பொன் அடுத்தது பெண். இதை மட்டும் காமம் என்று மால் தூதன் (ஆஞ்சிநேயர்) உரைக்கவில்லை. காமம் என்றால் இச்சை ஆசை. எதன் மீதாவது ஒரு மனிதனுக்கு தீவிர ஆசையும் பற்றும் வந்துவிட்டால் அது கிடைக்கும் வரை அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது. ஒரு வேளை அது பலருக்கும் பயனுள்ள காரியமாக இருந்தாலும் பாதகமில்லை. ஒன்றுமில்லாத சுய நல லாப நோக்கம் வந்து விட்டால் அதற்காக எல்லா செயலும் ஏன்? தகாத செயலை செய்யக்கூட அவனை அந்த இச்சை அந்த ஆசை காமம் இழுத்து செல்லும். எனவே அப்பேற்பட்ட தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தரக் கூடிய அந்த காமத்தை ராம நாம ஜெபம் ஓட்டும் என்பதே பொருள்.

கேள்வி: காமத்தை வெல்வது எப்படி?

அபிராமி அந்தாதி ஓதி வரலாம். நல்ல பலன் உண்டு. சமீப காலத்தில் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஆண்களுக்கு காமம் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது. காமத்தை வெல்ல முடியாமல் பெரிய ஞானிகள் கூட தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால் அபிராமி பட்டர் அதிலே சுலபமாக வென்றுவிட்டார். எப்படி என்றால் பார்க்கின்ற பெண்களையெல்லாம் அன்னையாகவே பார்த்தான். காமம் அவனை விட்டு ஓடி போய்விட்டது. அபிராமி பட்டறை புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அந்த கோவிலிலே அன்னைக்கு பணிவிடை செய்த எத்தனையோ அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் இவரை நன்றாக புரிந்து கொண்டார். அந்த தருணத்திலே ஞான நிலையில் இருந்து பட்டர் பாடிய பாடல்களை (அபிராமி அந்தாதி) அவர் பிரதி எடுத்து வைத்ததனால் தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அபிராமி பட்டரின் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 45

கேள்வி: திருவிடைமருதூர் பற்றி? (கும்பகோணம் அருகில்)

சந்திரனின் சாபத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தலம். அதை சந்திரனுக்காக இறைவன் உண்டாக்கினாரப்பா இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? யாம் கூறுகின்ற பரிகாரங்களை செய்யும் (எம்மை வணங்குகின்ற) சில பக்தர்கள் எண்ணுகிறார்கள். நாம் அகத்தியரை வணங்குகிறோம். அவரிடம் கேட்டால் அவர் இன்னொரு தெய்வத்தை வணங்க சொல்கிறார். நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிக்கின்ற கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் அன்று என்ன நடந்தது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட இன்னல் தீருவதற்கு என்ன வழி சுவாமி? என்று சந்திரன் வினவுகிறார். சந்திரனே பூமியிலே காவிரிக்கரையில் இந்த இடத்தில் (திருவிடைமருதூர்) சென்று வணங்கு தக்க காலத்தில் வந்து யாம் உன் சாபத்தை நீக்குகிறோம் என்றார் இறைவன். இங்கு தான் கவனிக்க வேண்டும். சாபத்தை நீக்குகிறேன் என்று சொல்பவர் யார்? சிவன். அங்கேயே நீக்க வேண்டியது தானே? எதற்காக இடை மருதூர் சென்று வணங்கு. பிறகு நீக்குகிறேன் என்று சொல்ல வேண்டும்? காரணம் அத்தனை காலம் சந்திரன் அந்த இடத்திலே தவம் செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. அதைப் போலவே திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்று தவம் செய்து சாபத்தை நீக்கிக் கொள் என்று நந்திக்கு இறைவன் சொல்கிறார். நந்தி தவம் செய்ய சென்ற உடனேயே இந்திரனை அழைத்து ஊர்வசியை அனுப்பி நந்தியின் தவத்திற்கு இடையூறு செய் என்கிறார். இதுதானப்பா இறைவனின் லீலை. எனவே சிவனே விரும்பி சந்திரனுக்காக ஏற்படுத்திய ஸ்தலங்களுள் இடை மருதூரும் (திருவிடைமருதூர்) ஒன்று.

திருவிடை மருதூர் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

திருக்கழுக்குன்றம் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 261 திருக்கழுகுன்றம்