கேள்வி: புலனடக்கம் குறித்து விளக்குகள் ஐயனே தாம்பதிய உறவை விட்டதால்தான் ஞானமார்க்கம் சித்திக்குமா?
அப்படியெல்லாம் நாங்கள் கூறவில்லை. இறைவன் அருளாலே ஒன்றை நன்றாக புரிந்து கொள். எது குற்றமாகிறது? எது தவறாகிறது? எது பாவமாகிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீது ஆதிக்கமும் பிறர் மனதையும் பிறர் உடலையும் பிறர் உடைமைகளையும் பாதிக்கும் வண்ணம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் போது பாவத்திற்குண்டான ஒரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லறம் நடத்துவது என்பது நேர்மையான முறையிலே ஒருவன் நடத்துகிற இல்லறம் கட்டாயம் இறைவனுக்கு எதிரானது அல்ல. ஆனால் தாரமாக இருந்தாலும் கூட உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும் நிலையிலே அவளைக் கட்டாயப்படுத்தி நீ கூறிய அந்த நிலைக்கு ஆட்படுத்துவது ஒருவிதமான பாவத்திற்கு கணவனை ஆட்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கு கட்டாயம் இல்லாத நிலை இருக்கிறதோ எங்கு இயல்பாக அனைவரும் ஒத்துப் போகிறார்களோ அந்த உணர்வுகள் எதுவும் இறைவனுக்கு எதிரானது அல்ல.