கேள்வி: பிறவிகளைப் பற்றி
ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும் போது இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகிவிடும். மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இந்த பாரத கண்டத்திலே கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல் இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே சில புண்ணியங்கள் வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும் ஸ்தல யாத்திரை செல்வதற்கும் தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். பிறகு ஆணாக பெண்ணாக ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல அந்த பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள் கல்வி பணி பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்துவிடும். எதோடு புண்ணியம் தீர்ந்துவிடுகிறதோ அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதைத்தான் (புண்ணியத்தை) அவன் அந்த ஊரிலே பிராத்தனை செய்து தர்மங்களை செய்து சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.