கேள்வி: ஏன் ஆண்களைவிட பெண்கள் அதிகம் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்:
இறைவன் அருளால் கூறவருவது யாதென்றால் இவள் கூறுவதை ஒருபுறம் வைத்துக்கொள்வோம். ஆனால் ஆண்களைக் கேட்டுப் பார்த்தால் பெண்களால்தான் தலைவலி வருகிறது என்று கூறுகிறார்கள். பெண்களைக் கேட்டால் ஆண்களால்தான் வருகிறது என்று கூறலாம். இந்த கபால வேதனை (தலைவலி) என்பது கூட ஒரு பிறவிலே அந்த பிறவி முழுக்க சிலருக்கு மன உலைச்சலைத் தந்ததின் பாவத்தின் எதிரொலி. ஒவ்வொரு பிணிக்கும் (நோய்க்கும்) ஒரு கர்மவினை என்றுமே காரணமாக அமைகிறது. சில பிணிகளுக்கு (நோய்களுக்கு) பல்வேறு பாவவினைகள் காரணமாக அமைகிறது. பொதுவாக இவற்றைக் கூறினாலும்கூட அப்படியெல்லாம் ஏற்றுக்கொள்வது என்பது எம்மால் இயலாது. மனித தேகம் என்பது ஒரே விதமாக படைக்கப்பட்டாலும் சில மாற்றங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. மன அழுத்தம் அல்லது தீவிரமான சிந்தனை இவற்றிலிருந்து துவங்கி நூற்றுக்கணக்கான காரணங்கள் உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் இந்த கபால வேதனைக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனவே திருப்பழனம் (தஞ்சாவூர் மாவட்டம்) என்றொரு ஸ்தலம் இருக்கிறது காவிரியின் கரையிலே. கபால தொல்லைகள் இருக்கும் மனிதர்கள் அங்கு சென்று இயன்ற வழிபாடுகள் செய்வது கட்டாயம் நல்ல பலனைத் தரும். அதற்காக இல்லின் அருகே ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு சென்றால் தீராது என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. குறிப்புக்காக இதனை கூறுகிறோம். இந்தக் கபால வேதனை என்பது ஆணுக்கும் வருகிறது. பெண்ணுக்கும் வருகிறது. யாருக்கு தீவிரமாக இருக்கிறதோ அது ஒரு வகையான வினையின் எதிரொலி என்பதை புரிந்து கொண்டு பரிபூரண சரணாகதி பக்தியும் இயன்ற தொண்டும் செய்து வந்தால் கட்டாயம் அதிலிருந்து விடுதலை பெறலாம்.
திருப்பழனம் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்