கேள்வி: கந்தர் அலங்காரம் பற்றி:
பொதுவாக ஆரங்களாலும் அணிமணிகளாலும் இறைவனுக்கு அலங்காரம் செய்வதே பக்தனுக்கு வழக்கமாக உள்ளது. அதையே மொழியின் வார்த்தைகளாக செய்வது தான் இந்த அலங்காரம். இதன் உட்பொருள் மீண்டும் மெய்ஞானத்தைதான் குறிக்கிறது. ஆனாலும் கூட இதையும் இல் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்றால் புற வாழ்க்கைக்கு மேனி அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் அது தொடர்பான துறையிலே இருப்பவர்கள் உடல் வசீகரமாக இருக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த கந்த அலங்காரத்தை ஓதி வரலாம்.
கேள்வி: கலசவிழா (கும்பாபிஷேகம்):
புறத்தே ஒன்றை வைத்து அகத்தே திசை திருப்ப செய்யப்பட்ட எத்தனையோ வழிபாடு முறைகளில் கலச நீராட்டு விழாவும் ஒன்று. அங்கனமாயின் ஒரு மனிதன் தன் தேகத்தை யோகாசனங்களால் வலுவாக்கி திடமாக்கி உள்ளத்தை உரமாக்கி உயர்வாக்கி கர்மங்களை எல்லாம் குறைத்து வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பத்மாசனமிட்டு தொடர்ந்து தவத்தில் ஈடுபட ஈடுபட தான் யார்? ஆத்மா யார்? அது எதற்காக வந்தது? என்பதை உணர்ந்து தனக்குள்ளே ஊறுகின்ற ஓர் அமுதத்தை தன் ஆத்மா முழுவதும் பரவ செய்வதுதான் உண்மையான அக கலச விழா. அதை குறிப்பது தான் இந்த புற கலச விழா.