ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 161

கேள்வி: எனக்கு ஏன் சித்தர்களோடு தொடர்பு ஏற்பட்டது?

இறைவனின் கருணையைக் கொண்டு இந்த இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது இத்தனை மனிதர்கள் இருக்க எனக்கு இவ்வாறு சித்தர்களோடு தொடர்பு ஏன் ஏற்பட்டது? அதிலும் குறிப்பிட்ட சித்தர்களோடு என்ன வகையான நிலையில் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சித்தனோடு ஒரு பிறவியில் தொடர்பு ஏற்பட்டால் அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் போகிறார் என்று பொருள் அல்ல. எந்த சித்தர்களும் பெயர் தான் மாறுமே தவிர உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே இந்த எமது திருவடியைத் தொட்டு எம்மோடு தொடர்புடைய சில மாணாக்கன் பின்னால் ப்ருகுவிடமோ (ப்ருகு மகரிஷி) வசிஷ்டரிமோ காகபுஜண்டரிடமோ கூட செல்வதுண்டு.

காகபுஜண்டரிடம் தொடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும் மானசீகமாகவும் அறிந்து கொண்டவர்கள் எம்மிடம் வருவதும் உண்டு. பொதுவாக சித்தர்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள் ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே இந்த சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம். அடுத்தது வழிபாட்டோடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தொடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும் ஏதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார். இப்படி கூறும் பொழுது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. எல்லோருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை. இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாரோ அந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறோம். அவ்வாறு நாங்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலே எவனொருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானோ அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ உயிர்க்கொலை புரிய மாட்டேன் என்று இருந்திருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும் கடாட்சமும் இறை அருளாலோ அல்லது யாமே விரும்பியோ செய்திடுவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.