ஒரு அன்பர் டிரைவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அகத்திய மாமுனிவர் அறிவுரை:
சாரதி (ஓட்டுநர்) தொழில் என்பது கிருஷ்ண பரமாத்மாவின் தொழில் தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒரு போதும் கிடையாது. இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல் சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ அவ்வாறு முழுமையாக மொழி அறிவு போக்குவரத்து விதிமுறை அறிவு வாகனத்தின் நுணுக்கத் தன்மை இயக்கத் தன்மை என்று பிரித்து சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய திறம்பட செயல்பட முடியாது. அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில் அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு இவன் வாகனத்தை இயக்குகிறான் வேக நிலை மாற்றுகிறான். வலம் இடம் திரும்புகிறான். வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான் என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்து பொருந்தும்.
வாகனத்தை இயக்கும் போது இட வலமாக அலசல் இருந்தால் உடனடியாக சாரதியை (ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். நன்றாக பயிற்சி பெறு என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று (உடனடியாக) வேக தடுப்பானை (ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால் அந்த சாரதி (ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும் மின் கலனின் (பேட்டரி) திறனையும் எரிபொருளையும் சோதிக்கா விட்டால் அவன் கவனக் குறைவான சாரதி (ஓட்டுநர்) ஆகும். நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர் அ முதல் ஃ வரை சோதித்து சிறு சிறு குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு (ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்) அப்படி செய்யவில்லை என்றால் அந்த சாரதி (ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதி தான். எனவே சரியான வாகனம் சரியான சாரதி சரியான பயணிகள் சரியான பயணம் அப்பா.
வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சாளரங்களை (சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் வலப்புறம் இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும் அப்புறம் (பின்) பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல் நிதானமாக அதற்குரிய குறியீடுகளை (காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது வாகனத்திலே உள்ள ஔிரும் பொருள்கள் (மின் விளக்குகள்) எல்லாம் சரியான சாய் கோணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பொருள்களை ஔிர விடுவதும் அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல் முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு எந்த கோணத்தில் பிரயோகிக்கப் (உபயோகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா (கண்ணாடி) போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால் உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால் அது இயங்காமல் போய் விபத்தை ஏற்படுத்தும்.
வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில் ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று நிலை இரண்டு நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை இந்த அண்டத்திற்கும் உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்த தொடர்புடையவர்கள் எல்லாம் நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ யாங்கள் (சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.