கேள்வி: காவிரி பிரச்சனை எப்போது தீர்க்கப்படும்?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும் எதாவது மனிதர்குள்ளே பிரச்சனைகளும் பிணைப்புகளும் அல்லது சிக்கல்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் காலந்தோறும் மாறலாம். ஆனால் மனிதர்களிடையே பகைமையும் கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே தனி மனித ஒழுக்கம் தனி மனித பண்பாடு வளராத வரை இதை எதனாலும் யாராலும் தீர்க்க இயலாது. இது மனித ரீதியான பார்வை. விதியும் கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறதோ அப்படிதான் மனித மனம் செல்லும். இருந்த போதிலும் யாங்கள் இறையிடம் பிராத்தனை வைத்து இந்த சமாதான லோகம் என்றும் இருக்க வேண்டும். அப்படியொன்று இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இங்குள்ள மனிதர்களும் அங்குள்ள மனிதர்களும் எல்லா மனிதர்களும் இறைவனருளால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது அனைத்தும் இறைவனருளால் படைக்கப்பட்டவை. எனவே இதில் யாரும் ஆண்டானும் இல்லை. யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் போது என்கிற உணர்வு ஒவ்வொரு தனி மனித மனதிலும் வர வேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும் வர வேண்டும் வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட அந்த வரம் வர வேண்டும் என்று யாமும் இத்தருணம் நல்லாசி கூறுகிறோம்.
கேள்வி: எந்த மந்திரங்கள் ஜெபிக்கலாம்?
இட்டமான (விருப்பமான) தெய்வத்தின் ரூபத்தை மனதிலே தரித்து எந்தவொரு மந்திரத்தையும் உருவேற்றலாம். ருத்ராட்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஓம் நமோ நாராயணா என்று சொல்லக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை. இறையும் கூறவில்லை. எதை வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு எந்த மந்திரத்தையும் மனமார மனம் ஒன்றக் கூறலாம். அதில் கட்டாயம் ஆன்ம உயர்வு உண்டு.