கேள்வி: ஒரு ஆன்மாவிற்கு ஒரு பிறவி ஏற்படும் பொழுது அதன் மொத்த தொகுப்பாக பல கோடி பிறவிகளின் தொகுப்பாக அமையுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட கர்மாவைக் கழிப்பதற்காக ஒரு பிறவியும் இன்னும் பல பிறவிகளும் வேண்டியிருக்குமா?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பிறவிகளின் சூட்சுமம் கர்மாக்களின் சூட்சுமம் ஒரு பிறவியில் ஒரு ஆத்மா நுகருகின்ற கர்மக் கணக்கின் சூட்சுமம் இறை மட்டும் அறிந்த ரகசியமப்பா. இருந்தாலும் இறை நிலைக்கு சமமான ரிஷிகளும் ஞானிகளும் ஓரளவு உணர்ந்தாலும் அது தெய்வீக ரகசியம் என்பதால் பொதுவாக சராசரி மனிதர்கள் அறிவது கடினம். அப்படி அறிய முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும். இருந்தாலும் பொதுவாக குறிப்புக்காக கூறுகிறோம். சில ஆத்மாக்கள் ஒரு குறிப்பிட்ட பாவத்தையே கழிப்பதற்கே ஒரு பிறவியல்ல பல்வேறு பல் நூறு பல்லாயிரம் பிறவிகள் எடுக்க நேரிடும். சில ஆத்மாக்கள் பலவிதமான பாவங்களை நுகர்வதற்கு பல நூறு நூறு நூறு பிறவிகள் எடுக்க நேரிடும். இது அந்தந்த தனிப்பட்ட ஆத்மாவின் கர்மக்கணக்கிற்கும் அதை எப்படி அந்த ஆத்மா நுகர வேண்டும்? என்று இறைவன் தீர்மானிக்கிறாரோ அதைப் பொறுத்தும் அமைவதாகும்.
கேள்வி: மாந்தர்களுக்குப் (மனிதர்களுக்கு) புரியும் வண்ணம் அற்புதங்கள் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அது எப்பொழுது நடக்கும்?
அற்புதம் என்று கூறி அதனை அற்புதமாய் செய்வதைவிட அற்புதம் இது என்று உணரும் வண்ணம் செய்வதே யாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே விரும்புகிறோம். எனவே ஒன்றை அற்புதமாய் செய்து விட்டோம் என்று நாங்கள் (சித்தர்கள்) அற்பமாய் கூறாமல் நடப்பதெல்லாம் அற்புதம் என்று உணரும் வண்ணம் சேய்களை (பிள்ளைகளை) மாற்றுதே அற்புதமப்பா.