அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
ஆதியந்த பராபரத்தின் திருவை சாட்சி. அன்பான மனோஹரியின் பாதம் சாட்சி. சோதி எனும் சுடர் ஒளியின் திருவடி சாட்சி. சொல்லொண்ணா ரகசியங்கள் அடங்கி நிற்கும் பரம்பொருள் சாட்சி. சாட்சியே மெய் சாட்சியே மூலம்தானப்பா. சாட்சிக்குத் தெரியாது இங்கு எக்காட்சியும் கிடையாதப்பா. சாற்றுங்கால் சாட்சியறியா காட்சி ஏதேனும் உண்டா? என்றால் ஏதும் இல்லை. காட்சிக்கும் தெரியும் எது மெய்யான மனசாட்சி என்று. சாட்சிக்கும் சாட்சியாய் நின்று காத்து அருளுகின்ற அந்த மெய் சாட்சியின் காட்சிதனை காண வேண்டும் என்பதையே மெய் நோக்கமாகக் கொள்ள வேண்டும். மாந்தரினம் (மனித இனம்) அதை விட்டு விட்டு தனம் தேடி அலைவதும் அதுபோல வாழ்வதும் அது வாழ்க்கையே மெய் என இருப்பதும்தான் கவலைக்குரிய சூழல் அப்பா. மற்றுமொரு வினா எழக்கூடும். இந்த நில உலகிலே மாந்தன் (மனிதன்) தனம் இல்லாமல் எப்படி வாழ்வது? அதுபோல வினாக்கள் கால காலம் இருப்பதுதான். மாந்தர்கள் (மனிதர்கள்) நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தனத்தை தேடாதே விட்டுவிடு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அழிகின்ற அந்த தனத்தை சேர்க்கிறேன் என்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் யாம் கூறுகிறோம்.
தனம் சேர்க்கிறேன் என்று எதாவது வழியிலே தனம் சேர்ந்தால் போதும் என்று பாவத்தை சேர்த்துக் கொண்டால் பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதே மெய்யாகும். ஆகுமப்பா ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ இல்லையோ எம்மை நம்புகிறானோ இல்லையோ எத்தனையோ பிரச்சினைகளை சிக்கல்களை எதிர்கொள்கிறான். உறவு சிக்கல் பண சிக்கல் ருண (கடன்) சிக்கல் பிணி சிக்கல் தச வழி (தொழில் வழி) சிக்கல்கள் பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம் மிகுந்த புண்ணியத்தை சத்தியத்தை பொறுமையை தர்மத்தை பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ ஏழையோ நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால் எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ பாவத்தை செய்தானோ அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும். ஆகுமே எத்தனைதான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனைதான் உபதேசம் செய்தாலும் கூட மாந்தன் (மனிதன்) செவியில் (காதில்) இவையெல்லாம் ஏறாது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். சுருக்கமாக சொல்லப் போனால் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் செய்யா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகுமப்பா.