அகத்ததிய முனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இறை வழிபாட்டை மறவாது ஆழ்ந்து நுண்ணியமாய் தீவிரமாய் நுணுக்கமாய் எவ்வாறு லோகாய ஆசைகளை மனிதனை விட்டு பிரிக்க முடியவில்லையோ அதைப்போல மனித மனம் இறைவனின் திருவடி மீது ஒரு பிரிக்க முடியாத பற்றை வளர்த்துக் கொண்டால் ஒரு மாறாத அன்பை வளர்த்துக் கொண்டால் அதே ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கரை சேருகின்ற வழியாகும். ஆனால் ஞானியர்கள் இதனையும் தாண்டி ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த உயர்ந்த நிலையை நோக்கி செல்வது கடினம் என்பதால்தான் மனிதன் நடப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு ஊன்றுகோல் தேவை ஒரு பிடிமானம் தேவை என்பதுபோல இறைவனின் அருள் கருணை கல்யாண குணங்கள் ரூபம் இறைவன் இத்தன்மை கொண்டவர் போன்றவற்றை மனதிற்குள் எண்ணி அந்த நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் உயர் குணத்திற்குள் அந்த ஆத்மா ஐக்கியமாக முயல வேண்டும்.
இதை ஒவ்வொரு மனிதனும் கடுமையாக முயற்சி செய்து போராடித்தான் பெறவேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படாது என்பது எமக்கும் தெரியும். அது முடியாது என்பதால் முயற்சிக்காமல் இருக்கத் தேவையில்லை. எத்தனை முறை தோற்றாலும் தொடர்ந்து அந்த உயர்ந்த விஷயத்தை நோக்கி செல்வதில் தவறில்லை. தீய பின் விளைவுகள் இல்லாத ஒரே உறவு இறைவன்தான். நேற்றும் இன்றும் நாளையும் ஒரே நிலையில் எல்லா உயிர்களையும் சம அளவில் பார்க்கக் கூடியவர் பராமரிக்கக் கூடியவர். தன்னை உணர்ந்தாலும் உணரா விட்டாலும் உயிர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்பவர். உயிருக்கு உயிராய் இருக்கக் கூடியவர். அந்த உயிரையும் தாண்டி உணர்வுகளால் ஐக்கியப்பட்டு இருக்கக் கூடியவர். எப்பொழுதும் எங்கும் தீர்க்கமாய் திடமாய் ரூபமாய் அரூபமாய் நம்பிக்கையிலும் நம்பிக்கையின்மையிலும் அவர்தான் இருக்கிறார். அப்பேற்பட்ட அந்த உயர்ந்த இறைவனிடம் மனிதன் எந்த அடிப்படையில் தோற்று விடுகிறான் என்றால் லோகாய விஷயங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து பரம்பொருளை நோக்கி சென்று பழக்கப்பட்டு விட்ட மனிதனுக்கு ஒருவேளை அவன் எண்ணிய எண்ணம் அவன் விரும்புகின்ற விஷயம் கிட்டவில்லை என்றால் இறை நம்பிக்கை பொய்த்துப் போய் விடுகிறது.
எனவேதான் ஒரு மனிதனுக்கு இத்தகைய ஆசைகள் இருந்தாலும் கூட அவைகள் நடந்தாலும் சரி நடக்கா விட்டாலும் சரி இறைவா இன்னின்ன விஷயங்கள் எனக்குத் தேவை என்று என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. இவைகள் எல்லாம் கிடைத்தால் நான் சந்தோஷமாக வாழலாம் என்று எண்ணுகிறேன். இயன்றால் இதனைத் தந்து உதவு. இல்லையென்றால் எது கிடைத்தால் தடையற்ற சந்தோஷமோ திருப்தியோ தொடர் நிம்மதி எங்களுக்குக் கிட்டுமோ அதைத் தா என்று ஒரு வேண்டுகோளை வைக்கலாம். அதிலும் நுணுக்கமாய்ப் பார்த்தால் ஏதாவது வந்தால்தான் தந்தால்தான் நிம்மதி சந்தோஷம் என்றாலே அதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டு விடுகிறது. எனவே பெறுவதிலோ அல்லது வெளியிலிருந்து வருவதிலோ சந்தோஷமில்லை. ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதிலிருந்து எப்படியெல்லாம் இழக்கிறானோ தன்னை இழந்தால்தான் ஆனந்தம். தன் உணர்வு தான் என்ற நினைவு எப்பொழுது நூற்றுக்கு நூறு விழுக்காடு அற்றுப் போகிறதோ அப்பொழுதுதான் அவன் தூய நித்திய ஆனந்தத்தை பிரம்மானந்தத்தை உணர முடியும் நுகர முடியும்.
நான் அற்றுப் போன பிறகு அங்கு உணர்வதற்கு எது இருக்கிறது? நான் இருந்தால்தானே அந்த நான் எதையாவது உணர முடியும்? என்ற ஒரு வினா வைக்கலாம். உண்மைதான் நான் கடுகளவாவது இருந்தால்தான் உணரமுடியும். ஆனால் அப்படி உணரக் கூடியது என்றென்றும் தொடர்ந்து சந்தோஷமாக மட்டும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அது துக்கமாக துன்பமாக துயரமாக உளைச்சலாக விரும்பத்தகாத நிகழ்வாக இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவமான மனிதன் நான் என்ற உணர்வில் இருக்கலாம். இரண்டில் ஒன்று மட்டும்தான் வேண்டும். அதாவது துயரம் வேண்டாம் சந்தோஷம் வேண்டும் துக்கம் வேண்டாம் நிம்மதி வேண்டாம் என்று எந்த மனிதன் எண்ணுகிறானோ அப்பொழுது அவன் நான் அற்றுப் போக வேண்டும். நானில் இருக்கும்வரை அவன் நாணித்தான் வாழ வேண்டிய நிலைமை இருக்கும். எனவே நான் அற்றுப் போனால் அப்பொழுதுதான் நிரந்தர நிம்மதி. இல்லையென்றால் ஒரு மனிதன் தன்னுடைய நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் ஏதாவது ஒரு எல்லையை வகுத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்.
இது கிடைத்தால் ஆனந்தம் அது கிடைத்த பிறகு இன்னொன்று கிடைத்தால் ஆனந்தம் பிறகு கிடைத்தது நீடித்தால் ஆனந்தம். நான் எண்ணுவது போல என்னை சுற்றியுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் துக்கம். அப்படி நடந்தால் ஆனந்தம் ஒருமுறை நடந்து மறுமுறை நடக்கவில்லை என்றால் துக்கம். என்னுடைய உணர்வுகள் எந்த விதத்திலும் காயப்படாமல் இருக்க வேண்டும். என்னுடைய உடல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உடல் அவஸ்தை என்பதே இருத்தல் கூடாது. உணர்வுகள் எப்பொழுதும் ஒருவிதமான நல் உயர் சுக அனுபவத்தில் திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவத்திற்கு குறுக்கே யாரும் வந்து விடக் கூடாது. நான் எந்த நிலையில் சிந்திக்கிறேனோ எந்த உச்சத்தில் இருந்து கொண்டு எதையும் பார்க்கிறேனோ என்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு மனிதன் எதை எண்ணினாலும் தோற்றுத்தான் போவான். நடப்பதையெல்லாம் இயல்பாகவே எடுத்துக் கொண்டு ஒரு பார்வையாளனாகவே பார்த்து கொண்டு உள்ளுக்குள் அவன் கரைந்து போய் விட்டால் அந்த பரம்பொருளோடு நீக்கமற இணைந்து விட்டால்தான் அவனுக்கு நிரந்தர சுகம் நிரந்தர நிம்மதி.
பிறகு தனக்குள் இருந்து தான் இன்னும் துடித்துக் கொண்டும் இருந்தால் அந்தத் தானில் ஏதாவது மிச்சம் மீதி இருக்கும் வரையிலும் அங்கு சந்தோஷமும் ஒருவேளை இருக்கலாம். துக்கமும் இருக்கலாம் அல்லது வேறு வகையில் கூறப்போனால் முட்டாள்தனமான அறியாமையில் தொடர்ந்து வாழக்கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம் அல்லது தெய்வீக அறிவின் உச்சத்தில் இருக்கக் கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம். அறியாமையால் கிடைக்கக்கூடிய சந்தோஷம் நீடிக்காது. தீய பின் விளைவுகளைத் தரும். நல்ல முறையிலே அறிவார்ந்த நிலையிலே மெய்யறிவை தெளிந்த தெய்வீக அறிவை பெற்ற பிறகு கிடைக்கக் கூடிய சந்தோஷம் நீடிப்பதாக இருக்கும். அதனையும் தாண்டி ஒரு நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் பெற ஒருவனுக்கு அவன் என்ற உணர்வோ அவள் என்ற உணர்வோ அற்றுப்போக வேண்டும். அது அற்றுப் போகும் வரை அவனிடமும் அவளிடமும் எல்லாம் இருக்கும். எல்லா இருக்கின்ற அந்த நிலையிலே வாழ்விலே இவைகள் எல்லாம் வேண்டும் இவைகள் எல்லாம் வேண்டாம். எனக்கு தானியங்கள் வேண்டும் தவிடு வேண்டாம். எனக்கு நீர் வேண்டும் சேறு வேண்டாம். எனக்கு சுகந்த நறுமணமிக்க காற்று வேண்டும். ஆனால்
புயல் வேண்டாம். தேவையான அளவு நீர் வேண்டும். ஆனால் வெள்ளம் வேண்டாம் என்றால் அது சாத்தியமேயில்லை.
ஒவ்வொன்றின் உச்ச நிலையையும் அடுத்த நிலையையும் மனிதன் சந்தித்தே ஆக வேண்டும். இரண்டு தன்மையும் வேண்டாம் என்றுதான் ஒருவனால் இருக்க முடியுமே தவிர இரண்டில் ஒன்று என்பது இறை படைப்பில் எப்பொழுதுமே இல்லை. இரண்டையும் சமமாக பார்க்கின்ற பக்குவத்தைதான் மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணர்வை நோக்கி எமை நாடுகின்ற மனிதர்கள் மெல்ல மெல்ல வர இதுபோல் நல்விதமாய் முழுமதி தினம் தன்னிலே செவ்வாய்க்குரிய நட்சத்திரத்திலே இறைவன் திருவடியை வணங்கி யாம் அனைவருக்கும் நல்லாசி கூறுகிறோம்.